| ADDED : ஏப் 16, 2024 06:04 AM
புதுச்சேரி : கடந்த காங்., ஆட்சிக்காலத்தில், முதல் நிலையில் இருந்த புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டதாக, முதல்வர் ரங்கசாமி பேசினர். புதுச்சேரி அண்ணா சாலையில் நடந்த ரோட் ேஷாவில், அவர் பேசியதாவது:மத்தியில் மீண்டும் தே.ஜ., கூட்டணி ஆட்சியே மலரப்போகிறது. நமச்சிவாயத்தை வெற்றி பெற செய்தால், நம் மாநிலத்திற்கு தேவையான அதிக நிதியை நம்மால் பெற முடியும். புதுச்சேரிக்கு அதிகமான திட்டங்களை கொண்டு வர இயலும். உலகளவில் நம்முடைய நாடு சிறந்த நாடாக வருவதற்கு, பிரதமர் மோடி எடுத்து வரும் முயற்சிகள் எண்ணில் அடங்காதவை. இன்றைக்கு முன்னேறிய நாடுகள், பிரதமரின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. கடந்த காங்., ஆட்சிக்காலத்தில், புதுச்சேரி மாநிலத்தில், எந்த நலத்திட்டமும் முறையாக செயல்படுத்தப்படவில்லை. அப்போது ஆட்சியாளர்களுக்கும் கவர்னருக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளால், பல குளறுபடிகள் நடந்தன. இதனால், முதல் நிலையில் இருந்த நமது மாநிலம் பின்னுக்கு தள்ளப்பட்டது.கடந்த தேர்தலில், வைத்திலிங்கம் வெற்றி பெற்று எம்.பி., ஆனதால், புதுச்சேரிக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு, படித்த இளைஞர்கள், 2 ஆயிரம் பேருக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. நம் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பிரதமர் மோடிக்கு, நாம் நன்றி சொல்ல வேண்டியது அவசியம். அவரது கரத்தை வலுப்படுத்த, நம்முடைய வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.