| ADDED : ஆக 08, 2024 11:06 PM
புதுச்சேரி: தனியார் மருத்துவ கல்லுாரி 50 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க., நீதிமன்றம் செல்ல தயங்காது என, எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசினார்.புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசின் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறாத அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., எம்.எல்.ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாகதியாராஜன், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோர் சட்டபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பின், எதிர்க்கட்சித் தலைவர் சிவா கூறியதாவது:புதுச்சேரியில் தி.மு.க., ஆட்சிகாலத்தில் தனியார் மருத்துவக் கல்லுாரிகள் ஏற்படுத்தப்பட்டபோது புதுச்சேரி அரசுக்கு 50 சதவீத இடங்களை கொடுக்க வேண்டும் என, சட்டமாக்கி தான் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் குறைந்த அளவே இடங்களை பெற்று வந்தனர். இந்த ஆண்டு அதுவும் பஞ்சாயத்து பேசி குறைந்த அளவு இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற உள்ளனர். தமிழகத்தில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்படுகிறது. இந்த ஆண்டு புதுச்சேரி அரசு தனியார் மருத்துவ கல்லுாரிகளிடம் இருந்து 50 சதவீத இடங்களை கண்டிப்பாக பெற வேண்டும்.முதுநிலை மருத்துவ சேர்க்கையிலும் 50 சதவீத இடங்களை பெற வேண்டும். அரசு இதை செய்ய தவறும் பட்சத்தில் இண்டியா கூட்டணி சார்பில் மக்கள்திரள் தொடர் போராட்டம் நடத்தப்படும். இது சம்பந்தமாக நீதிமன்றத்தை நாடவும் தி.மு.க., தயங்காது' என்றார்.