| ADDED : ஆக 02, 2024 01:22 AM
புதுச்சேரி: சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பேசியதாவது; கவர்னர் உரை அரசின் கொள்ளை விளக்க உரையாகவும், மாநிலத்திற்கு வர உள்ள திட்டங்களின் முகப்பாகவும், கடந்த நிதியாண்டில் திட்டங்களால் பெற்ற நன்மைகள் குறித்த விளக்க முடிவுரையாக இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் இந்த உரையில் இல்லை. கவர்னரின் உரை மக்களுக்கு ஏமாற்றத்தையும் அரசின் இயலாமையை காட்டுகிறது. மாநில நிதி கமிஷன், யூனியன் பிரதேச நிதி குழுவிலும் புதுச்சேரி இல்லாதது குறித்தும் விளக்கம் இல்லை. ஆதிதிராவிடர் மக்களுக்கு சிறப்பு கூறு நிதி திட்டம் கொண்டு வந்தது, ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கல்வி கட்டணம் அரசு கொடுப்பது வரவேற்கதக்கது. கணக்கெடுப்பு நடத்தாமல், எந்த ஆணைய பரிந்துரை இன்றி 2 சதவீத மக்களுக்கு 10 சதவீத இ.டபிள்யூ. எஸ்., இடஒதுக்கீடு கொடுத்தது நியாயமா.இதனால் எம்.பி.சி., ஒ.பி.சி., மக்களும் உங்களை கைவிட்டனர். அதிகாரிகள் சொல்வது போல் நிர்வாகம் நடத்தினால், 2026 தேர்தலிலும் இதே நிலை ஏற்படும். குருப் -ஏ, குருப்-பி பணியிடங்களில் புதுச்சேரி மாநிலத்தினர் ஒரு சதவீதம் கூட இடம் பெறவில்லை. வெளிமாநிலத்தினரின் வேட்டை காடாக புதுச்சேரி மாறியுள்ளது. இதற்காக மாநில பணியாளர் தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும். வழிகாட்டுதல்கள் இல்லாத வறட்சி உரை. இதனால் மாநிலத்திற்கு வளர்ச்சி இல்லை. எனப் பேசினார்.