| ADDED : மார் 29, 2024 03:20 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலுக்கான பூத்சிலிப் வழங்கும் பணிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கி ஏப்.12ம் தேதிக்குள் நிறைவடையும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்தார்.தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கூறியதாவது:புதுச்சேரி லோக்சபா தேர்தல் களத்தில் 27 வேட்பாளர்களின் 35 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.தேர்தலில் போட்டியிட விரும்பாத வேட்பாளர்கள் இன்றும்,நாளை 30 ம்தேதி மாலை 3 மணிக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.வாகன தணிக்கையில் வங்கி கொண்டு சென்ற ரூ. 3.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டு அதில் 3.47 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது. ரூ. 3.6 லட்சம் மதிப்புள்ள 996 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அபராதமாக ரூ. 6.38 லட்சம் போடப்பட்டுள்ளது.வீட்டில் இருந்து ஓட்டளிக்க 85 வயதுக்கு மேற்பட்ட 1609 முதியோரும்,1322 மாற்றுத்திறனாளிகளும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் வீடு தேடி சென்று ஓட்டுகள் பெறும் பணிகள் வரும் ஏப்ரல் 2ல் துவங்கும்.தபால் வாக்கு அளிக்க சேவை வாக்காளர்கள் 325 பேரும், அத்தியாவசிய பணிகளில் இருக்கும் 43 பேரும் விண்ணப்பித்துள்ளனர். கட்டணமில்லா 1950 தொலைபேசி மூலம் 248 புகார்கள் வந்தன. 31 புகார்கள் தீர்வு காணப்பட்டன. வாட்ஸ்ஆப்பில் 20 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 10 புகார்களும் வந்தன. ஓட்டுச்சாவடிகள் வெயில் அடிக்காமல் இருக்கவும், இருக்கைகள், தண்ணீர் வசதி செய்யப்பட்டு வருகின்றன.பூத் சிலிப் ஏப்ரல் முதல்வாரத்தில் துவங்கி ஏப்ரல் 12க்குள் வீடு, வீடாக வந்து தரப்படும்.பாதுகாப்பு பணிகளுக்காக சி.ஏ.பி.எப்., எனப்படும் இரண்டு மத்திய ஆயுத போலீஸ் படை இரண்டு கம்பெனிகள் புதுச்சேரிக்கு ஏற்கனவே வந்துள்ளன. இன்னும் பத்து கம்பெனிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் வரவுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.