| ADDED : ஆக 11, 2024 05:11 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த வாயிற் விளக்க கூட்டத்தில் ஏராளமான சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியில் சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில், 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி உயர்த்தி வழங்கப்பட்ட நோயாளி கவனிப்பு படி மற்றும் நர்சிங் அலவன்ஸ் ஆகியவற்றின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலியாக உள்ள மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதை வலியுறுத்தி வரும், 12ம் தேதி மாலை 4:00 மணிக்கு சம்பா மாதா கோவில் எதிரில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில் ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கோரிக்கை விளக்க வாயில் விளக்க கூட்டம் நடந்தது. இதில், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் முனுசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரிதாஸ், பொருளாளர் பாக்கியவதி, சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் மணிவாணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஜவஹர், புதுச்சேரி அரசு செவிலிய அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் செல்வி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் துணை பொதுச்செயலாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.