| ADDED : மே 02, 2024 12:28 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ேஹாமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நாடு முழுதும் 24 லட்சம் பேர் எழுத உள்ளனர். புதுச்சேரியில் 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.கடந்த காலங்களில், தமிழகம் உள்பட பிற மாநில மாணவர்கள் புதுச்சேரியில் தேர்வு மையத்தினை தேர்வு செய்து நீட் தேர்வு எழுதினர். இதனால் மாநில நீட் தேர்ச்சி பட்டியலில் பிற மாநில மாணவர்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தது. அவற்றை பிரிப்பதும் பெரிய வேலையாக இருந்தது. அத்துடன் பிற மாநில மாணவர்கள் சீட்டினை அபகரிக்க விண்ணப்பிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியில் நீட் தேர்வு எழுத 7 தேர்வு மையங்களும், காரைக்காலில்-2, மாகி-1, ஏனம்-1 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடந்தாண்டு யூ.ஜி., நீட் தேர்வு எழுதிய 5,714 மாணவர்களில், 3,140 பேர் தகுதி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 54.9. இது 2022ம் ஆண்டு தேர்ச்சி சதவீதமான 52.79 ஐ விட 2.11 சதவீதம் அதிகம். இந்தாண்டு நீட் தேர்விற்கு புதுச்சேரி மாணவ, மாணவிகள் தயராகி உள்ளனர். எனவே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து புதுச்சேரி மாணவர்கள் சாதிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.