| ADDED : ஜூன் 29, 2024 06:18 AM
புதுச்சேரி : சுப்பையா சாலையில் ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.புதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளின் சாலையோர பிளாட்பாரங்களில் பல கோடி ரூபாய் செலவு செய்து கிராணைட் கற்கள் பதிக்கப்பட்டது.இந்த பிளாட்பாரங்களை பெட்டி கடைகள், தள்ளுவண்டி கடைகள், பிரியாணி கடைகள் என ஆக்கிரமித்து வியாபாரம் செய்தனர். குறிப்பாக சுப்பையா சாலையில், பில்லுக்கடை சந்து முதல் டூப்ளக்ஸ் சிலை வரையிலான பகுதியில் புட் ஸ் ரீட்ஸ் பெயரில் பிளாட்பாரம் மற்றும் சாலையில் ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் வைக்கப்பட்டது.அவற்றை அகற்றிக் கொள்ள பொதுப்பணித்துறை 2 நாள் அவகாசம் அளித்தது.அவகாசம் முடிந்ததால், பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலை பிரிவு ஊழியர்கள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை துவங்கினர். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தராஜன், உதவி பொறியாளர் பார்த்தசாரதி,புதுச்சேரி தாசில்தார் பிரதிவ், கிழக்கு எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் பிளாட்பாரத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டி கடைகளை அகற்ற முயன்றனர். அப்போது, வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை அகற்றி கொண்டனர். மீதமுள்ள பேனர், பிளக்ஸ் போர்டுகள், கட்டைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.நிரந்தரமாக எந்த பொருட்களையும் பிளாட்பாரத்தில் வைக்க கூடாது. வியாபாரம் செய்து விட்டு எடுத்து சென்ற விட வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.