புதுச்சேரி தாகூர் அரசு கல்லுாரி மைதானத்தில் நடந்த சிறப்பு துப்புரவு முகாமில், 5 டன் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் அக்கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, லாஸ்பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர்; கிரிக்கெட் விளையாடுகின்றனர்.புதர் மண்டி காணப்பட்ட இந்த மைதானத்தில், இந்திய கடலோர காவல்படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் சார்பில், சிறப்பு துப்புரவு பணி நேற்று நடந்தது. கடலோரக் காவல் படை கமாண்டர் டி.ஐ.ஜி., தஸிலா தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தாகூர் கல்லுாரி முதல்வர் சசி காந்த தாஸ் துவக்கி வைத்தனர்.தொடர்ந்து கடலோரக் காவல்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, தாகூர் கல்லுாரி, காஞ்சி மாமுனிவர் முதுநிலை கல்லுாரி மாணவர்கள், அலுவலர்கள், விமான நிலைய, உழவர்கரை நகராட்சி ஊழியர்கள், சபரி வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்கள் அக்சய பாத்திர அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மைதானத்தில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.ஜே.சி.பி., மூலம் மைதானத்தில் புதர்மண்டிய பகுதிகள் அகற்றி, சமப்படுத்தப்பட்டது. மைதான கேலரியில் சரிந்து கிடந்த பென்சில் மரமும் அகற்றப்பட்டது. இம்முகாமில் 5 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. உழவர்கரை நகராட்சி பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றினர். அச்சுறுத்திய மதுபாட்டில்கள்
இளைஞர்கள் கூட்டத்துடன் காலையில் பரபரப்பாக காட்சியளிக்கும் விளையாட்டு மைதானம், இரவு நேரத்தில் திறந்தவெளி பாராக மாறி விடுகிறது. மது குடிப்பவர்கள் மது பாட்டில்களை உடைத்து மைதானத்திலேயே ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இந்த மது பாட்டில்கள் விளையாட்டு வீரர்களின் கால்களை பதம்பார்த்து வந்தது. சிறப்பு முகாமில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள் அகற்றப்பட்டன.குப்பைகள் அகற்றிய பிறகு விளையாட்டு மைதானம் விசாலமானது. முகாமில், தேசிய மாணவர் படை குரூப் கமாண்டர் மேனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.