| ADDED : மார் 24, 2024 04:27 AM
புதுச்சேரி: இது நம்ம புதுச்சேரியா என வியக்கும் அளவிற்கு சென்டர் மீடியனில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு பூத்து குலுங்கும் மலர்கள் ரம்யமாக காட்சியளிக்கின்றன.புதுச்சேரி மாநிலத்தில் 64 கி.மீ., துாரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. பிரதான மாநில சாலைகள் 36 கிலோ மீட்டர், 324 கி.மீ., மாவட்ட சாலைகளும், 318 கி.மீ., கிராம சாலைகள் என, மொத்தம், 741 கி.மீ., சாலைகள் புதுச்சேரி பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்படுகிறது. இது தவிர, 1,052 கி.மீ., சாலைகளை நகராட்சியும், 1342 கி.மீ., கொம்யூன் பஞ்சாயத்து சாலைகளை உள்ளாட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.இந்த நெடுஞ்சாலைகளில் விபத்தினை தடுக்கும் தடுப்பு கட்டைகளில் அழகு செடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை போதிய பராமரிபின்றி பாலைவன செடிகள் கருகி காணப்பட்டன. சென்டர் மீடியனில் உள்ள செடிகளை முறையாக தண்ணீர்விட்டு பராமரிப்பில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து சாலையோர பூங்காக்களை புதுபொலிவு செய்ய அரசு திட்டமிட்டு, கவனம் செலுத்தியது.இதற்கு பொதுப்பணித்துறையின் தேசிய நெடுஞ்சாலைகள் கோட்டத்தின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் செயல்வடிவம் தந்தனர். இந்த முயற்சிக்கு தற்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது.இந்திரா காந்தி சிக்னல் முதல் மரப்பாலம் வரை பல கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்டர் மீடியன் வளர்க்கப்பட்டு வரும் போகைன்வில்லா எனப்படும் காகித பூ செடிகள் ரோஜா நிறத்தில் பூத்து குலுங்கி ரம்மியமாக காட்சியளிக்கின்றன.காண்போரை கொள்ளை கொள்கின்றன. அடடா... இது நம்ம புதுச்சேரி சென்டர் மீடியனா என ஒருகனம் வியக்க வைக்கின்றன. இதேபோல் அனைத்து நெடுஞ்சாலை செடிகளையும் அரசு தனி கவனம் செலுத்தி பூத்து குலுங்க செய்து விழிகளை விரிய வைக்க வேண்டும்.