| ADDED : ஆக 18, 2024 04:33 AM
புதுச்சேரி : ஜிப்மரில் வேலை வாங்கி தருவாக யாராவது பணம் கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, ஜிப்பர் நிர்வாகம் எச்சரித்துள்ளது.ஜிப்மர் மருத்துவமனையில் குரூப்-பி பணியிடங்கள்- 169, குரூப் சி பணியிடங்கள்- 209 என, 378 பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 19ம் தேதி ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.இந்த இடங்கள் ஆன்லைன் போட்டி தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கிடையில் ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு இடங்களில் சத்தம் இல்லாமல் பணம் வாங்கும் வேலைகளும் நடந்து வருகின்றது. இத்தகவல் ஜிப்மர் நிர்வாகத்திற்கு சென்ற நிலையில் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிப்மர் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் போலியாக ஆட்சேர்ப்பு அறிவிப்புகள், அழைப்பு கடிதங்கள், நியமன கடிதங்கள் மூலம் பணம் வசூலிக்கப்படுவதாக எங்களுடைய கவனத்திற்கு வந்துள்ளளது. ஜிப்மர் ஆட்சேர்ப்பு விளம்பரம் https://jipmer.edu.inஎன்ற இணைய தளத்திலும், உள்ளூர், தேசிய செய்திகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன.மேலும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் மட்டும் நடத்தப்படுகிறது. போட்டி தேர்வு அடிப்படையில் மட்டுமே இந்த ஆட்சேர்ப்பு நடக்கும். எனவே ஏமாற்றும் நபர்களிடமிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் இது போன்ற போலியான நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு ஜிப்மர் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்காது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.