| ADDED : ஜூலை 30, 2024 05:08 AM
புதுச்சேரி: கூட்டணி அரசில் விரிசலை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் செய்ய பலர் தயாராக இருப்பதாக அ.தி.மு.க.,தெரிவித்துள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது:கடந்த ஆண்டு இலவச சைக்கிள் கொள்முதலில் நடந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் அரசிடம் சமர்பித்தோம். அடுத்த ஆண்டு சைக்கிளுக்கு பதிலாக பணம் வழங்கப்படும், மாணவர்கள் சைக்கிள் வாங்கியதை தலைமை ஆசிரியரிடம் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உறுதி அளித்தார்.ஆனால் தரமற்ற இலவச சைக்கிள்களை மீண்டும்கொள்முதல் செய்துள்ளது கண்டிக்கதக்கது.கடந்தாண்டு கூறியது போல் சைக்கிளுக்கு பதில் மாணவர் வங்கி கணக்கில் தலா ரூ. 6000 செலுத்த வேண்டும். ரூ. 15 ஆயிரம் கமிஷன் பெற்றுக் கொண்டு 50 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் உயர்மட்ட கமிட்டி அமைத்து, ரேஷன் அரிசி கொள்முதல் செய்து விநியோகிக்க வேண்டும்.குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க மாட்டோம் என கூறிய தி.மு.க., விடம், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசியுள்ளனர். தி.மு.க., சொல்வது ஒன்று, செய்வது ஒன்று.புதுச்சேரி முதல்வர் தி.மு.க., விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. தற்போது நடக்கும் கூட்டணி அரசில் விரிசலை பயன்படுத்தி பல அரசியல் கட்சிகள் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தயாராக உள்ளனர்.எனவே, முதல்வர் தனது எம்.எல்.ஏ.க்களை தன் வசம் வைத்து கொண்டு, ஆட்சியை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறினார்.