புதுச்சேரி: புதுச்சேரியில் அரசின் அனுமதி பெறாத, 32 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகள் உடனடியாக அனுமதி பெற வேண்டும் என, பொது சுகாதார கோட்டம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:ரெட்டியார்பாளையம், புதுநகர், 4வது குறுக்கு வீதி வீடுகளில் உள்ள கழிவறைகளில் இருந்து, கடந்த, 11ம் தேதி வெளியேறிய விஷ வாயு சம்பவம் வருந்தத்தக்கது. இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள், நடக்காமல் இருப்பதற்கு பொதுமக்கள் சில வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கழிவு நீர் இணைப்பை, பாதாள சாக்கடை குழாயில் 'செப்டிக் டேங்க்'கோடு நேரடியாக இணைத்து இருந்தால், அதை துண்டித்து இணைப்பை மாற்றி கழிவறைக்கும், பாதாள சாக்கடை குழாயில் நேரடியாக இணைப்பதற்கு முன், நடுவில் சிறிய சோதனை தொட்டி அமைக்க வேண்டும்.கழிவறை கோப்பையை எந்த விதத்திலும் 'செப்டிக் டேங்க்'கின் மேல் அமைக்க கூடாது.கழிவறை கோப்பையின் அடிப்பாகத்தில், 'எஸ்' வடிவு அல்லது 'பி' வடிவு 'டிராப்'பை பொருத்த வேண்டும். இப்படி பொருத்தினால், 'டிராப்'பில் தண்ணீர் தடுப்பு இருப்பதால், விஷவாயு கழிவறையில் புகாது.தற்போது இது போன்ற இணைப்பை மாற்றி அமைத்திட பொதுமக்கள், கழிவு நீர் உட்கோட்டத்தில், உதவி பொறியாளர் அலுவலகம், கழிவுநீர் உட்கோட்டம், பொது சுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை, எண்: 54, லால் பகதூர் சாஸ்திரி தெரு, புதுச்சேரி -1, எனும் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.இந்த இணைப்பை அரசு அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம், அரசு அங்கீகரித்த முறையில் தான் மாற்றி அமைக்க வேண்டும். இதுவரை அரசிடம் பதிவு பெற்ற, 34 ஆயிரம் கழிவு நீர் இணைப்புகள் தான் உள்ளன. மேலும் 32 ஆயிரம் அனுமதி பெறாத இணைப்புகள் உள்ளன. இணைப்பு அனுமதி பெறாதவர்கள், உடனடியாக அனுமதி பெற வேண்டும்.ரெட்டியார்பாளையம் புது நகரில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு செலவை அரசே ஏற்கும்.இந்த ஆலோசனை புது இணைப்பிற்கும், பழைய இணைப்பிற்கும் பொருந்தும். இந்த கழிவு நீர் இணைப்பு வேலைகளை, அறிவிப்பு வந்த மூன்று மாதத்திற்குள் முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.