உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காவேரி கூக்குரல் சார்பில் புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

காவேரி கூக்குரல் சார்பில் புதுச்சேரியில் 1.5 லட்சம் மரங்கள் நடத்திட்டம்!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு புதுச்சேரியில் உள்ள விவசாய நிலங்களில் 1,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (05-06-2024) புதுச்சேரியில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மூத்த காவல் கண்காணிப்பாளர் திரு. நாரா சைத்தன்யா முதல் மரக்கன்றை நட்டு விழாவை தொடங்கி வைத்தார்.சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.அந்த வகையில் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மூத்த காவல் கண்காணிப்பாளர் (சட்டம் ஒழுங்கு) திரு. நாரா சைத்தன்யா அவர்கள் முதல் மரக்கன்றை நட்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அவர் பேசியதாவது, 'வருங்கால சந்ததியினருக்கு நாம் என்ன கொடுத்து செல்கிறோம் என்பது தான் முக்கியம். நாம் பெரும்பாலும் நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல வருவாய் தரும் சூழல் இவற்றை தான் கொடுக்க நினைக்கிறோம். ஆனால் இன்று நாம் கொடுத்திருப்பது மாசுபட்ட காற்று, உணவு மற்றும் ஏராளமான கண்ணுக்கு தெரியாத நோய்கள். இன்று காலநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. திடீரென வரும் வெள்ளம், அதீத வெப்பம் என பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். கால நிலை மாற்றம் சார்ந்த கொள்கைகள் வகுப்பது இந்த தருணத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படியொரு சூழலில் இது போன்ற திட்டங்களை முன்னெடுக்கும் ஈஷா மையத்திற்கு என் நன்றி. இந்த பணி கடவுளால் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய்மண்ணுக்கு சேவையாற்றுவதை காட்டிலும் வேறொரு மகத்தான பணி இல்லை' இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு புதுச்சேரியில் மட்டும்1,00,000 மரங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் இவ்வியக்கம் காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:17

புதியதாக மரக்கன்றுகள் நடுவது இருக்கட்டும். முந்தைய ஆண்டில் நட்ட மரக்கன்றுகள் எந்த நிலையில் இருக்கின்ற என்பதையும் மக்கள் அறியவிரும்புகின்றனர். அவற்றின் இன்றைய நிலை என்னவென்று அறிவிக்கமுடியுமா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை