| ADDED : நவ 22, 2025 06:03 AM
புதுச்சேரி: ரவுடிகள் மற்றும் வன்முறையை துாண்டும் வகையிலான சமூக ஊடகங்களை ஊக்குவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சீனியர் எஸ்.பி., கலைவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், கூறியதாவது: ரவுடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், வன்முறைச் செயல்கள் தொடர்பான உள்ளடக்கங்களை சமூக ஊடகங்களில் புகழ்வது, ஊக்குவிப்பது, பரப்புவது போன்ற செயல்பாடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமூக விரோத சக்திகளை ஊக்குவிக்கும் சில டிஜிட்டல் ஊடகக் கணக்குகளை புதுச்சேரி போலீசார் கண்டறிந்துள்ளனர். இது இளம் வயதினரை தவறான நடத்தைக்கு ஊக்குவிப்பதுடன், பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதனைக் கண்காணிக்க, சிறப்புப் பிரிவான ரவுடி ஒழிப்புப் படை (ஆன்டி ரவுடி ஸ்வார்டு) மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட சைபர் குழுக்கள் அமைப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் புதுச்சேரியில் உள்ள அனைத்து பக்கங்கள் மற்றும் கணக்குகளையும் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதில், வன்முறையைத் துாண்டும் உள்ளடக்கத்தை உருவாக்கி, பகிர்வது, ஊக்குவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆகையால், பொதுமக் கள் இணையதளத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது போன்ற தீங்கிழைக்கும் சுயவிவரங்கள் குறித்து அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். பாதுகாப்பான மற்றும் அமைதியான புதுச்சேரியைப் பேணுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அத்தியாவசியம்' என்றார்.