| ADDED : ஜன 23, 2024 04:49 AM
புதுச்சேரி : வி.ஐ.டி.,கல்வி குழுமம்,தேசிய கல்வி நிறுவனமான விஸ்டாவுடன் இணைந்து நடத்திய புதுமை சிந்தனையாளர்-2023க்கான போட்டியில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.பள்ளி மாணவர்கள் இடையே புதுமையான சிந்தனையை உருவாக்குதல்,தொழில் முனைவோராக அவர்களை மாற்ற ஆண்டுதோறும் புதுமை சிந்தனையாளர்கள் எனும் தலைப்பில் இந்த அறிவார்ந்த கருத்து போட்டி இந்த நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டிற்கான போட்டி சென்னை,தென்னார்காடு,வட ஆற்க்காடு, வேலுார், புதுச்சேரி மண்டலங்களில் இருந்து 200 பள்ளிகளை சேர்ந்த 1700 மாணவர்கள் ஆரம்ப சுற்றுக்கு தகுதி பெற்றனர்.இவர்களில் 50 பேரின் கருத்துகள் அடுத்த நிலைக்கு தேர்வு செய்யப்பட்டன.அவற்றில் 10 படைப்புகள் தேசிய தொழில்முனைவோர் நிறுவனத்தால் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.இறுதி சுற்றில் அமலோற்பவம் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களான நிதேஷ் ராஜா,யோகேஷ் ஆகியோரின் பறவைகளை பாதுகாப்பதில் மேம்படுத்தப்பட்ட காற்றாலை நிறுவுதல் எனும் படைப்பு மிகச் சிறந்த மூன்று படைப்புகளில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கோப்பை,பாராட்டு சான்று,10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசினை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பாராட்டினார்.புதுமையான சிந்தனையால் பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவர்களை பள்ளி நிறுவனர் லுார்துசாமி பாராட்டினார்.