| ADDED : ஜன 02, 2024 04:46 AM
பாகூர் ; சீர்வரிசை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலுார் அடுத்த வண்டிபாளையம் பழைய ஆலை தெருவை சேர்ந்த முத்து மனைவி சரண்யா, 31; இவர் கடலுாரில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி ஏரிபாக்கத்தைச் சேர்ந்த வீரம்மாள் என்பவரின் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு, ஒரு சவரன் மற்றும் ஒரு கிராம் நகையை சீர்வரிசையாக செய்து உள்ளார்.சரண்யா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு வீரம்மாள் சீர் வரிசை செய்யாததால், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, கடுவானுார் மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வரும் வீரம்மாளின் மருமகன் வேல்முருகன், சீர் வரிசை நகையை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அவர் கூறியபடி, நகையை திருப்பித் தரவில்லை. இந்நிலையில், சரண்யா, கடந்த 30ம் தேதி காலை கடுவனுாரில் உள்ள வேல்முருகன் வீட்டிற்கு சென்று, நகையை திருப்பி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், சரண்யாவை ஆபாசமாக திட்டி, தாக்கியுள்ளார்.இதில், காயமடைந்த சரண்யா கடலுார் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார், வேல்முருகன் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.