உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐ.ஐ.டி., சர்வதேச ஆராய்ச்சி பூங்கா அமைக்க கள ஆய்வு

ஐ.ஐ.டி., சர்வதேச ஆராய்ச்சி பூங்கா அமைக்க கள ஆய்வு

புதுச்சேரி, : நாட்டின் பெருமை வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை ஐ.ஐ.டி., தனது சர்வதேச அளவிலான ஆராய்ச்சி பூங்காவை புதுச்சேரியில் ஏற்படுத்த திட்டமிட்டு அணுகியுள்ளது. இது தொடர்பான நில எடுப்பு கள ஆய்வு நடந்தது.இந்தியாவின் பல்கலைக் கழகத்தால் இயக்கப்படும் முதல் ஆராய்ச்சி பூங்கா சென்னை ஐ.ஐ.டி.,யில் தான் உள்ளது. இது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள வெற்றிகரமான ஆராய்ச்சி பூங்காக்களின் வரிசையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும், சர்வதேச அளவில் ஆராய்ச்சி பூங்காவை அமைக்க திட்டமிட்டுள்ள சென்னை ஐ.ஐ.டி., அதற்கான விசலாமான 100 ஏக்கர் இடத்திற்கான அனுமதி கேட்டு, புதுச்சேரி அரசினை அணுகி இருந்தது. இது தொடர்பாக கடிதமும் எழுதி இருந்தது.கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தினை புதுச்சேரி அரசு முடிவு செய்து 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. இதற்காக 748 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியும் 16 ஆண்டுகள் நகர்ந்துவிட்டது. தற்போது கரசூரில் தொழிற்சாலைகளை வரவேற்க திட்டமிட்டுள்ள புதுச்சேரி அரசு பல்வேறு மாநிலங்கள், சர்வதேச அளவில் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.எனவே, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தின் ஆராய்ச்சி பூங்காவிற்கு இங்கு இடம் ஒதுக்கியது. இதனையடுத்து கரசூரில் சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவிற்கு நில எடுப்பது சம்பந்தமாக கள ஆய்வு நேற்று நடந்தது. சென்னை ஐ.ஐ.டி., கல்வியாளர்கள் அடங்கிய குழுவினர், அமைச்சர் நமச்சிவாயம், தொழில் துறை இயக்குனர் ருத்ரகவுடு முன்னிலையில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ள இடம் தொடர்பாக ஆய்வு செய்தனர்.எல்லைகள் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். விரைவில் புதுச்சேரி அரசுக்கும், சென்னை ஐ.ஐ.டி.,க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை