| ADDED : ஆக 09, 2011 02:53 AM
புதுச்சேரி : தேசிய முன்னோடி தடகள விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கினர். உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டுத் திடலில், முன்னோடி தடகள வீரர், வீராங்கனைகளுக்கான 31வது தேசிய அளவிலான தடகள போட்டி கடந்த 4ம் தேதி துவங்கியது. புதுச்சேரியில் முதன் முதலாக நடந்த போட்டிகளில் 18 மாநிலங்களை சேர்ந்த முன்னோடி தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.நேற்று முன்தினம் மாலை நடந்த நிறைவு விழாவிற்கு ஓய்வு பெற்ற எஸ்.பி., வெங்கடாஜலம் வரவேற்றார். அமைப்பு நிர்வாகிகள் வக்கீல்கள் பாலசுப்ரமணியன், மருதுபாண்டி, முருகையன், ராமமூர்த்தி வாழ்த்தி பேசினர். தமிழக தடகள அமைப்பு நிர்வாகி உஜாகர் சிங் ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.விழாவில் அமைச்சர் ராஜவேலு பேசும்போது' முதல்வர் ரங்கசாமி விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கி வருகிறார். மற்ற துறைகளில் ஓய்வு உள்ளது. ஆனால் விளையாட்டு துறையில் மட்டும் எப்போதும் ஓய்வில்லை. இங்கு முதியவர்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளதை பார்க்கும் இளைஞர்களுக்கு, விளையாட்டின் மேல் ஆர்வம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டு முக்கியம்' என்றார்.அமைச்சர் கல்யாணசுந்தரம் பேசுகையில்'நவீன காலத்தில் துரித உணவை அதிகளவில் மக்கள் விரும்புகின்றனர். உணவுதான் நமக்கு பல்வேறு வியாதியை வரவழைக்கிறது. இவற்றிலிருந்து மீள்வதற்கு உடற்பயிற்சி அவசியம் என்றார்.வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர். போட்டிகளில் புதுச்சேரியை சேர்ந்த ரகுமான் சேட், கில்பர்ட், பிரேம்குமார், இந்திரா ஆகியோர் பரிசுகளை பெற்றனர். ஏற்பாடுகளை புதுச்சேரி முன்னோடி தடகள வீரர்கள் சங்க (மூத்தோர் தடகள கழக கூட்டமைப்பு) நிர்வாகிகள் செய்திருந்தனர்.