| ADDED : நவ 28, 2025 04:41 AM
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை, கடலுக்கு செல்ல வேண்டாம் என, மீன் வளத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று 28ம் தேதி முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 65 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே எவரேனும் ஆழ்கடல் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், எப்.ஆர்.பி., பைபர் படகுகள், கட்டுமரங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.