| ADDED : நவ 18, 2025 06:02 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்த் துறையில் 'தமிழாய்வு களங்கள்' தலைப்பில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது. பேராசிரியர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.ஆய்வு நிறுவனத்தின் உள்தர மதிப்பீட்டு ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன்,குமரேசன், செல்வராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி தொழில்நுட்பபல்கலைக் கழக துணைவேந்தர் மோகன் கலந்து கொண்டு கருத்தரங்கினை துவக்கி வைத்து, பேசுகையில் தமிழ்மொழி மிக தொன்மையானது. இம்மொழியில் தோன்றியுள்ள தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் முதன்மையானதாகும். தொல்காப்பியம் குறிப்பிடும் முதல் பொருள், கருப்பொருள் என்பன சுற்றுச்சூழல் ஆய்வில் குறிப்பிடத்தக்க இடம்பெறுவன ஆகும். அறிவியல் அறிஞர்கள் சுற்றுச்சூழலை இன்று ஆழமாக ஆய்வு செய்யும் நிலையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழர்களின் சுற்றுச்சூழல் சிந்தனைகளைத் தொல்காப்பியத்தின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. மாணவர்கள் தொல்காப்பியம், நன்னுால் முதலான இலக்கண நூல்களை படிக்க வேண்டும், கடைகளில் விளம்பர பலகைகளில் இடம்பெற்றுள்ள பிறமொழி சொற்களைப் படம் பிடித்து, அதற்குரிய தமிழ்ச்சொற்களை உரியவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவிகளை பெற்று மாணவர்கள் தமிழ் ஆய்வுத்துறையில் ஈடுபட வேண்டும் என்றார்.