| ADDED : மார் 10, 2024 04:53 AM
வீடுகளில் எலிகளின் அட்டகாசத்தால், மக்கள் அவதியடைகின்றனர். இதனால் வீடுகளில் விஷ மருந்துகளை வைத்து எலிகளைக் கொல்கின்றனர்.இவை, எலி பேஸ்ட், எலி கேக்குகள் என பல வடிவங்களில் கிடைக்கின்றன. எலி மருந்துகளை கொண்டு புதுச்சேரியில் அண்மை காலமாக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இன்னொரு புறம், எலி கேக்கை சாக்லெட் என, சாப்பிட்டுக் குழந்தைகள் இறக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால், உயிரை பறிக்கும் எலி மருந்துகளுக்கு நிரந்த தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.மருத்துவர்கள் கூறுகையில், 'சமீபகாலமாக புதுச்சேரியில் எலி மருந்துகளை சாப்பிட்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. எலி மருந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை, சிறுநீரகச் செயலிழப்பு என, உடலின் பல உறுப்புகள் செயலிழக்கும். இருதயம், கல்லீரலைப் பாதிக்கும். கல்லீரல் செயலிழந்தால், ரத்தம் உறையும் தன்மை இல்லாமல் போகும். இதனால், மூளை மற்றும் நுரையீரலுக்குள் ரத்தம் கசிய ஆரம்பிக்கும். உறங்கும் நிலையிலேயே நோயாளி கோமாவுக்குச் சென்று இறந்துவிடுவார். எலி மருந்து சாப்பிட்ட உடன் உயர் மருத்துவச் சிகிச்சை எடுத்தால், காப்பாற்ற வாய்ப்பு உள்ளது' என்றனர். எனவே, எலி மருந்துகள் சாதாரணமாக கடைகளில் விற்கப்படுவதால், இவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.