உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஷஸ் டெஸ்ட்: பவுலர்கள் ஆதிக்கம்: முதல் நாளில் 19 விக்கெட் சரிந்தன

ஆஷஸ் டெஸ்ட்: பவுலர்கள் ஆதிக்கம்: முதல் நாளில் 19 விக்கெட் சரிந்தன

பெர்த்: ஆஷஸ் டெஸ்டின் முதல் நாளில் அனல் பறந்தது. இரு அணி பவுலர்களும் பட்டையை கிளப்ப, முதல் நாளில் 19 விக்கெட் சரிந்தன. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 7, இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ் 5 விக்கெட் சாய்த்தனர்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. ஆஸ்திரேலிய 'லெவன்' அணியில், வேகப்பந்துவீச்சாளர் பிரண்டன் டாக்கெட் 31, அறிமுகமானார். 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.ஸ்டார்க் அசத்தல்: இங்கிலாந்து அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் ஸ்டார்க் 35, வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ஜாக் கிராலே (0) அவுட்டானார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் 'வேகத்தில்' பென் டக்கெட் (21), ஜோ ரூட் (0) வெளியேறினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஒல்லி போப் (46), கேமிரான் கிரீன் பந்தில் அவுட்டானார். ஸ்டார்க் பந்தில் ஸ்டோக்ஸ் (6) போல்டானார். இங்கிலாந்து அணி 115 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.பின் இணைந்த ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் ஜோடி ஆறுதல் தந்தது. புரூக் அரைசதம் விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்த போது டாக்கெட் பந்தில் புரூக் (52) அவுட்டானார். ஸ்டார்க் பந்தில் ஜேமி ஸ்மித் (33), மார்க் உட் (0) ஆட்டமிழந்தனர்.இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 7 விக்கெட் கைப்பற்றினார்.ஸ்டோக்ஸ் பதிலடி: பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். ஆர்ச்சர் 'வேகத்தில்' ஜேக் வெதரால்டு (0), லபுசேன் (9) வெளியேறினர். பிரைடன் கார்ஸ் பந்தில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (17), கவாஜா (2) அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் ஸ்டோக்ஸ் 34, 'வேகத்தில்' சரிந்தனர். இவரது பந்தில் டிராவிஸ் ஹெட் (21), கேமிரான் கிரீன் (24), அலெக்ஸ் கேரி (26), ஸ்டார்க் (12), ஸ்காட் போலந்து (0) அவுட்டாகினர்.ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்து, 49 ரன் பின்தங்கி இருந்தது. லியான் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5, ஆர்ச்சர், கார்ஸ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.நிரம்பிய மைதானம்முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தை காண நேற்று, பெர்த் மைதானத்திற்கு 51,531 பேர் வந்திருந்தனர்.மூன்றாவது வீரர்ஜேசன் கில்லெஸ்பி, ஸ்காட் போலந்து ஆகியோருக்கு பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் அறிமுகமான 3வது பழங்குடி வீரரானார் பிரண்டன் டாக்கெட் 31.* ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக 'லெவன்' அணியில் இரு பழங்குடி வீரர்கள் (போலந்து, டாக்கெட்) நேற்று இடம் பெற்றனர்.24வது முறைஇங்கிலாந்தின் ஜாக் கிராலேயை அவுட்டாக்கிய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் முதல் ஓவரில் 24வது முறையாக விக்கெட் கைப்பற்றினார்.சிறந்த பந்துவீச்சுமுதல் இன்னிங்சில் 12.5 ஓவரில் (4 'மெய்டன்') 58 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், இந்த ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில், 7.3 ஓவரில் (4 'மெய்டன்') 9 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்திருந்தார்.* தவிர இது, பெர்த் மைதானத்தில் பதிவான சிறந்த பந்துவீச்சானது. இதற்கு முன் 2018ல் இந்தியாவின் முகமது ஷமி 24 ஓவரில், 56 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார்.100 விக்கெட்இங்கிலாந்தின் ஜோ ரூட்டை அவுட்டாக்கிய ஸ்டார்க், ஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதுவரை 23 டெஸ்டில், 104 விக்கெட் சாய்த்துள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 13வது ஆஸ்திரேலிய பவுலரானார் ஸ்டார்க். இப்பட்டியலில் ஷேன் வார்ன் (195 விக்கெட்), மெக்ராத் (157) முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.* இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 100 விக்கெட் சாய்த்த முதல் ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்துவீச்சாளரானார் ஸ்டார்க். அடுத்த இடத்தில் மிட்செல் ஜான்சன் (87 விக்கெட்) உள்ளார்.35 ஆண்டுகளுக்கு பின்வேகத்தில் மிரட்டிய ஸ்டார்க், 35 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7 விக்கெட் சாய்த்த பவுலரானார். இதற்கு முன், 1990-91ல் பெர்த்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் கிரெய்க் மெக்டெர்மாட் முதல் நாளில் 8 விக்கெட் வீழ்த்தினார்.17வது முறைடெஸ்ட் அரங்கில் அதிக முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் சாய்த்த ஆஸ்திரேலிய பவுலர்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்தார் ஸ்டார்க். இவர், 17 முறை இப்படி சாதித்தார். முதலிரண்டு இடங்களில் மெக்ராத் (29 முறை), டென்னிஸ் லில்லி (23) உள்ளனர்.முதன்முறைஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில் முதன்முறையாக இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் துவக்க ஜோடி, ஒரு ரன் கூட சேர்க்காமல் முதல் விக்கெட்டை பறிகொடுத்தன.ஐந்தாவது கேப்டன்ஆஸ்திரேலிய மண்ணில், ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 5வது இங்கிலாந்து கேப்டன் ஆனார் ஸ்டோக்ஸ்.விக்கெட் சரிவுஆஷஸ் டெஸ்ட் வரலாற்றில், 1909க்கு பின் முதல் நாளில் 19 விக்கெட் சரிந்தது. கடந்த 1909ல் நடந்த மான்செஸ்டர் டெஸ்டின் முதல் நாளில் இவ்விரு அணிகளும் 'ஆல்-அவுட்' (20 விக்கெட்) ஆகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை