| ADDED : மார் 17, 2024 10:22 PM
மும்பை: ''உலக கோப்பைக்கான ('டி-20') இந்திய அணியில் கோலி இடம் பெற வேண்டும்,'' என, முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 9வது சீசன் (ஜூன் 1-29) நடக்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இங்குள்ள ஆடுகளம் சீனியர் வீரர் விராத் கோலிக்கு சாதகமாக இருக்காது என்பதால் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் என தகவல் வெளியானது.சமீபத்தில் பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா, கேப்டன் ரோகித் சர்மாவிடம் உலக கோப்பைக்கான வீரர்கள் தேர்வு குறித்து பேசினார். அப்போது கோலியை நீக்குவது குறித்து கேட்டார். இதற்கு ரோகித், அணியில் கோலி நிச்சயம் இடம் பெற வேண்டும் என தெரிவித்தார். ஜெய் ஷாவின் இம்முடிவுக்கு முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கூறுகையில், ''ஜெய் ஷா தேர்வுக்குழு உறுப்பினர் அல்ல. இம்முடிவை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கரிடம் விட்டுவிட வேண்டும். இவர், மற்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வார். அணியில் கோலி இடம் பெற வேண்டும் என ஜெய் ஷாவிடம் கேப்டன் ரோகித் திட்டவட்டமாக தெரிவித்தார். எனவே கோலி நிச்சயம் இடம் பெறுவார்,'' என்றார்.
மும்பை வருகை
ஐ.பி.எல்., கிரிக்கெட் 17வது சீசன் மார்ச் 22ல் துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மகன் பிறந்ததால் லண்டனில் இருந்த கோலி நேற்று மும்பை திரும்பினார். இவர், பெங்களூரு அணிக்காக அசத்த காத்திருக்கிறார்.