லக்னோ: ஐ.பி.எல்., தொடரில் இன்று சென்னை, லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் சிறப்பாக செயல்பட்டு சென்னை அணி ஐந்தாவது வெற்றி பெற காத்திருக்கிறது. லக்னோவில் (உ.பி.,) இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி கடந்த இரு போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. பேட்டிங்கில் கடந்த இரு போட்டியில் அரைசதம் விளாசிய ருதுராஜ் (6 போட்டி, 224 ரன்) நம்பிக்கை தருகிறார். இவருடன் துவக்கம் தரும் ரச்சின் ரவிந்திரா முதல் இரு போட்டிக்குப் (37, 47) பின், தொடர்ந்து (2, 12, 15, 21) ஏமாற்றுகிறார். இன்று மீண்டால் நல்லது.'மிடில் ஆர்டரில்' வரும் ஷிவம் துபே (242) அணியின் 'நம்பர்-1' பேட்டராக திகழ்கிறார். மிட்செல் (135), ரகானே (124) ரன் வேட்டையை அதிகரிக்க வேண்டும். பின் வரிசையில் 'சீனியர்' தோனி (இதுவரை 25 பந்து, 59 ரன்) ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டலாம். பவுலிங் நம்பிக்கைபவுலிங்கில் கடைசி கட்ட ஓவரில் மிரட்டுகிறார் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா (8 விக்.,). அனுபவ முஸ்தபிஜுர் (10), 'கட்டர்', 'சுவிங்' என பல்வேறு விதமாக பந்துவீசி அசத்துகிறார். ஆடுகளம் சுழலுக்கு கைகொடுக்கலாம் என்பதால் ஜடேஜாவுடன், இன்று தீக் சனா சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.பூரன் பலம்லக்னோ அணி கடந்த இரு போட்டியில் தோற்ற சோகத்தில் உள்ளது. கேப்டன் லோகேஷ் ராகுல் (204), நிகோலஸ் பூரன் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். குயின்டன் டி காக்கும் (174) கைகொடுக்கிறார். தவிர படோனி, ஸ்டாய்னிஸ் தங்கள் பங்கிற்கு மீண்டு வர முயற்சிக்க வேண்டும். பந்துவீச்சை பொறுத்தவரையில் 'வேகப்புயல்' மயங்க் யாதவ் (3 போட்டி, 6 விக்.,) இருப்பது பலம். எனினும் காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத இவர், இன்று எப்படி செயல்படுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி யாஷ் தாகூர் (7), நவீன் உல் ஹக் (6), சுழலில் பிஷ்னோய் (4) என பலரும் எதிரணிக்கு நெருக்கடி தராதது பலவீனம். வருகிறார் கிளீசன் சென்னை அணி துவக்க வீரர் கான்வே. இடது கை பெருவிரல் எலும்பு முறிவு காரணமாக, துவக்க போட்டிகளில் பங்கேற்கவில்லை. தற்போது இவர் தொடரில் இருந்து விலகினார். இவருக்குப் பதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு கிளீசன் 36, அடிப்படை விலைக்கு (ரூ. 50 லட்சம்) சேர்க்கப்பட்டார். 'டி-20' அரங்கில் 90 போட்டியில் 101 விக்கெட் சாய்த்துள்ள இவர், 'யார்க்கர்' பந்துவீசுவதில் கில்லாடி.