பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. பரபரப்பான காலிறுதியில் 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணி, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் பிரிட்டனை வீழ்த்தியது. கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் பெரும் 'சுவராக' நின்று அணியை காத்தார்.பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதியில், உலக 'ரேங்கிங்' பட்டியலில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, பிரிட்டனை (உலகின் நம்பர்-2) எதிர்கொண்டது. இந்திய அணிக்கு துவக்கத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது. 17வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ், 'ரெட் கார்டு' பெற்று வெளியேற சிக்கல் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்ட நமது அணிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (22வது நிமிடம்) 'பெனால்டி கார்னர்' மூலம் கோல் அடித்து கைகொடுத்தார். இது, இத்தொடரில் இவரது 7வது கோல். இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு லீ மார்டன் (27) 'பீல்டு' கோல் அடித்து பதிலடி தர, போட்டி 1-1 என சமநிலையை எட்டியது.ரோஹிதாஸ் இல்லாததால், 10 வீர்களுடன் விளையாடிய இந்திய அணி எஞ்சிய 43 நிமிடங்கள் கவனமாக ஆடியது. தற்காப்பு ஆட்டத்தில் இறங்கி, பிரிட்டன் வீரர்கள் கூடுதலாக கோல் அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது. முழுநேர ஆட்ட முடிவில் ஸ்கோர் 1-1 என சமநிலையை எட்டியது.நான்கு கோல்: இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி, 'பெனால்டி ஷூட்' அவுட் முறைக்கு சென்றது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத், சுக்ஜீத் சிங், லலித் உபாத்யாய், ராஜ்குமார் பால் என நான்கு பேரும் கச்சிதமாக கோல் அடித்தனர். பிரிட்டன் சார்பில் ஜேம்ஸ் அல்பிரே, ஜாக் வாலஸ் கோல் அடித்தனர். கானர் வில்லியம்சன், பிலிப் ரோப்பரின் கோல் அடிக்கும் வாய்ப்புகளை அருமையாக தடுத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்தார். இந்திய அணி 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.2வது முறைகடந்த டோக்கியோ ஒலிம்பிக் (2021) காலிறுதியில் இந்திய அணி, பிரிட்டனை 3-1 என வீழ்த்தியது. தற்போது மீண்டும் பிரிட்டனை காலிறுதியில் வீழ்த்தியுள்ளது. கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா, இம்முறை தங்கம் வெல்ல காத்திருக்கிறது.'ரெட் கார்டு' சர்ச்சைஆட்டத்தின் 17வது நிமிடத்தில் இந்திய தற்காப்பு பகுதி வீரர் அமித் ரோஹிதாஸ் பந்தை வேகமாக கொண்டு சென்றார். அப்போது இவரது ஹாக்கி 'ஸ்டிக்', பிரிட்டன் வீரர் வில்லியம்ஸ் கல்னன் முகத்தில் பட, சுருண்டு கீழே விழுந்தார். விதிமுறைப்படி வீரர்கள் ஹாக்கி ஸ்டிக்கை ஆபத்தான முறையில் பயன்படுத்தக் கூடாது. எதிரணி வீரர்களின் தலைக்கு மேல் 'ஸ்டிக்கை' கொண்டு செல்லக்கூடாது. இதன்படி ரோஹிதாஸ் 'ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் வேண்டுமென்றே செய்யவில்லை என நடுவரிடம் சக இந்திய வீரர்கள் வாதாடியும், 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. நமது நல்ல நாள்இந்திய அணியின் அரணாக நின்றார் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். பிரிட்டன் வீரர்கள் கோல் போஸ்ட் நோக்கி அடித்த 21 ஷாட், 10 பெனால்டி கார்னர், 2 பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்புகளை தடுத்தார். ஒலிம்பிக் ஹாக்கியுடன் ஓய்வு பெற உள்ள ஸ்ரீஜேஷ் கூறுகையில்,''எனது கடைசி போட்டியாக இருக்குமோ என அஞ்சினேன். காலிறுதியில் வென்றதால், இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ரோஹிதாஸ் 'ரெட் கார்டு' சர்ச்சை பற்றி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இவர் இல்லாத நிலையில் 10 பேருடன் 43 நிமிடங்கள் தாக்குப்பிடிக்க வேண்டியிருந்தது. காலிறுதி நமது நாளாக அமைந்தது. இந்திய வீரர்கள் 'பெனால்டி ஷூட் அவுட்'டில் துல்லியமாக கோல் அடித்தனர். இது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்தது. அரையிறுதியில் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்,'' என்றார்.காப்பான் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில்,''10 வீரர்களுடன் விளையாட நேர்ந்ததை எண்ணி கலக்கம் அடையவில்லை. பயிற்சியின் போது இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க கற்று இருந்தோம். ரோஹிதாசின் தற்காப்பு பகுதி பணியை நான் ஏற்றுக் கொண்டேன். பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். எங்களை காக்க எப்போது ஸ்ரீஜேஷ் உள்ளார். நேற்றும் அசத்தினார்,'' என்றார்.பயிற்சியாளர் பாராட்டுஇந்திய பயிற்சியாளர் கிரக் புல்டன் கூறுகையில்,''தற்காப்பு பணியை ஸ்ரீஜேஷ் சிறப்பாக செய்தார். அணயின் பலம் 10 பேராக குறைந்த நிலையில், இந்திய வீரர்கள் சவாலை ஏற்றுக் கொண்டனர். ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்,''என்றார். போராடும் குணம்இந்திய ஹாக்கி ஜாம்பவான்கள் கூறியது:தன்ராஜ் பிள்ளை: இந்திய வீரர்களின் ஆட்டத்தை பார்த்து போது, எனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தகைய சிறந்த ஆட்டத்தை பார்த்து பல ஆண்டுகள் ஆகிறது. 44 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்று சாதிப்பர் என நம்புகிறேன்.அஜித் பால் சிங்: இந்திய வீரர்களின் போராடும் குணத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. தற்காப்பு ஆட்டம் சிறப்பாக இருந்தது. மீண்டும் பதக்கம் உறுதி.சர்தார் சிங்: நவீன ஹாக்கியில், பதட்டமான காலிறுதி போட்டியில் 10 வீரர்களுடன் விளையாடுவது கடினம். ஆனால் நமது வீரர்கள் அற்புதமாக விளையாடினர். இம்முறை தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.