சென்னை: சர்வதேச ஸ்குவாஷ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார் ஜோஷ்னா சின்னப்பா, 37. சென்னையில் பிறந்த இவர், 7 வயதில் ஸ்குவாஷ் 'ராக்கெட்' பிடிக்க துவங்கினார். 2005ல் பிரிட்டிஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்றார். உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டில் பதக்கங்களை குவித்தார். அடுத்து ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கிறார். இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டுக்கான 'பத்ம ஸ்ரீ' விருதுக்கு தேர்வானார். இம்மகிழ்ச்சியில் உள்ள ஜோஷ்னா சின்னப்பா, தினமலர் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
* 20 ஆண்டு கால முயற்சிக்கு பின் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ளது. எப்படி உணர்கிறீர்களா?
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில்(2028) ஒருவழியாக ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. ஒலிம்பிக்கில் இடம் பெற தகுதியான விளையாட்டு. நீண்ட கால கனவு நனவானதால், உலக ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளனர்.
* நீங்கள் ஒலிம்பிக்கில்(2028) பங்கேற்பீர்களா...ஒலிம்பிக் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா?
தற்போதைக்கு காயம் ஏற்படாமல் நல்ல உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒலிம்பிக் சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒலிம்பிக் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவுக்கு நிச்சயமாக பதக்கம் கிடைக்கும்.
* நாட்டின் உயரிய 'பத்ம ஸ்ரீ' விருதுக்கு தேர்வானது குறித்து?
பத்ம ஸ்ரீ விருதுக்கு மத்திய அரசு என்னை தேர்வு செய்ததை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
* தமிழகத்தில் ஸ்குவாஷ் போட்டிக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென அரசை வலியுறுத்துவீர்களா?
என்னை பொறுத்தவரை தமிழகத்தில் ஸ்குவாஷ் பயிற்சி அகாடமிகள் அதிகளவில் துவக்கப்பட வேண்டும். கிராமப்புறம் உட்பட அனைத்து நிலைகளிலும் திறமையான வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இவர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்க வேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நிதி உதவி அளிக்க வேண்டும்.
* வளரும் 'ஸ்குவாஷ்' நட்சத்திரங்களுக்கு உங்கள் 'அட்வைஸ்'?
கடினமாக பயிற்சி செய்யுங்கள். ஆட்ட நுணுக்கங்களை மகிழ்ச்சியுடன் கற்றுக் கொள்ளுங்கள். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நேர்மறையான அணுகுமுறை இருந்தால், விளையாட்டில் உச்சம் தொடலாம்.
* சென்னைப் பெண்ணாக எப்படி உணர்கிறீர்கள்?
எனது 'ஸ்குவாஷ்' வாழ்க்கையை சென்னையில் துவக்கியதில் மகிழ்ச்சி. சென்னைப் பெண் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறேன்.