உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 13 ஆண்டுகளுக்கு பின் தார்ச்சாலை பொன்பதிர்கூடம் வாசிகள் மகிழ்ச்சி

13 ஆண்டுகளுக்கு பின் தார்ச்சாலை பொன்பதிர்கூடம் வாசிகள் மகிழ்ச்சி

திருக்கழுக்குன்றம்:சென்னை பகுதியுடன் ஒருங்கிணைந்ததாக, செங்கல்பட்டு மாவட்ட பகுதி உள்ளது. தொழில் வளம், உயர்கல்வி வாய்ப்பு, மருத்துவ வசதிகள், போக்குவரத்து உள்ளிட்ட காரணங்களால், இப்பகுதி மிகுந்த வளர்ச்சி பெறுகிறது.வேலைவாய்ப்பு, கல்வி, முன்னேற்றம் கருதி, பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர், இங்கு வருகின்றனர்.செங்கல்பட்டு உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் குடியிருப்போர், நகர்ப்பகுதி கட்டமைப்புகளுடன் வசித்து வருகின்றனர். ஆனால், கிராம பகுதியினர், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், வனத்துறை பகுதிகள் அருகே வசிப்பவர்கள், சாலைகள் சீரழிந்து கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.நெடுஞ்சாலைத் துறை சாலைகள், கிராம பகுதிகளை இணைக்கிறது. பல பகுதிகளில் வனத்துறை காப்புக்காடு உள்ளதால், முக்கிய சாலைகள் வனப்பகுதியில் குறுக்கிடுகின்றன.பெரும்பாலான கிராமப் பகுதி சாலைகள், நீண்டகாலத்திற்கு முன்பே சேதமடைந்தது. தற்கால வாகன போக்குவரத்து அவசியம் கருதி, சில ஆண்டுகளுக்கு முன், நெடுஞ்சாலைத்துறை சாலைகளை புதுப்பித்தது. வனப்பகுதியில் கடக்கும் இடங்களில் மட்டும், புதிய சாலை அமைக்கப்படாமல் இருந்தது. திருக்கழுக்குன்றம் - பொன்விளைந்தகளத்துார் வழித்தட சாலை, 9 கி.மீ., உடையது. இத்தடத்த்தின் இடையில் உள்ள பொன்பதிர்கூடத்தில், 2 கி.மீ., சாலை, சாலுார் காப்புக்காடு வனப்பகுதியில் கடக்கிறது.கடந்த 13 ஆண்டுகளுக்கு முன், சாலை சேதமடைந்த நிலையில், 2019 - 20ல், புதிய சாலையும் அமைக்கப்பட்டது. ஆனால், வனப்பகுதி சாலையை புதுப்பிக்க, வனத்துறை அனுமதி தராததால், அங்கு சாலை அமைக்காமல் தவிர்க்கப்பட்டது,நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்டதால், ஜல்லி கற்கள் முற்றிலும் பெயர்ந்து, அபாய பள்ளங்களுடன் சேதமடைந்து காணப்பட்டது. இத்தடத்தில் உள்ள நரப்பாக்கம், எடையூர், வீரகுப்பம், பொன்பதிர்கூடம் உள்ளிட்ட கிராமத்தினர், அத்தியாவசிய தேவைகள், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, அரசு அலுவலகங்கள் என, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.இத்தடத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இல்லை. இருசக்கர வாகனங்களில் மட்டுமே சென்று வருகின்றனர். இதனால், வாகனம் அபாய பள்ளங்களில் இறங்கி ஏறி, குலுங்கி குலுங்கி தடுமாறினர். உடல்நலமும் பாதிக்கப்பட்டனர்.இதனால், வாகனம் சேதமடைந்து, இரவில் மிக அபாயத்துடன் சென்று வருகின்றனர். பெண்கள், முதியோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ், ஆட்டோ வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்தது.வனப்பகுதியில் கடக்கும் சாலைகளை புதுப்பிக்க, வனத்துறையிடம் அனுமதி கேட்டும், நீண்டகாலம் கிடப்பில் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது.திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, வனத்துறை அனுமதிக்கு வலியுறுத்தினார். இப்பகுதி சாலையில், இருசக்கர வாகனங்களே பெரும்பாலும் கடக்கும் சூழலை விளக்கி, அனுமதி கேட்கப்பட்டது. இதை பரிசீலித்த வனத்துறை, நீண்டகால இழுபறிக்கு பின் அனுமதி வழங்கியது.இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை கடந்தாண்டு இறுதியில், 2 கி.மீ., நீள சாலைப் பணிகளை துவக்கி, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் உள்ள வீரகுப்பம் - சோகண்டி வனப்பகுதியில் உள்ள 1 கி.மீ., சாலையும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து பொன்பதிர்கூடம் பகுதியினர் கூறியதாவது:எங்கள் ஊரில், காட்டுப் பகுதியில் உள்ள சாலை மோசமான நிலையில் இருந்தது. அவசரத்திற்கு கூட வாகனங்களில் செல்ல முடியாது. இந்த தடத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து, பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டதுசாலை பிரச்னையால், இந்த பகுதியினரை திருமணம் செய்ய தயங்கினர். இப்போது தான் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை