சென்னை:பெரும்பாக்கம் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 50,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 18,000 வாக்காளர்களுக்கு மட்டுமே ஓட்டு இருந்தது. மீதமுள்ள, 32,000 பேருக்கு ஓட்டு இல்லை.இங்கு வசிப்போர் மறுக்குடியமர்வு செய்யப்பட்டபோது, ஏற்கனவே வசித்த பகுதியில் இருந்த வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன.இதனால், அவர்களால் எங்கும் ஓட்டளிக்க முடியவில்லை. இது குறித்து, நம் நாளிதழில், ஏப்., மாதம் விரிவாக செய்தி வெளியானது.இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டார்.தேர்தல் முடிந்ததும், விடுபட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என,அதிகாரிகள் கூறினர்.இந்நிலையில் பெரும்பாக்கம், 9வது குடியிருப்பு வளாகத்தில், வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம், இன்றும் நாளையும் நடத்தப்படுகிறது.மேலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சேவைகளுக்கும், சம்பந்தப்பட்ட துறைகள் வர உள்ளன என, வாரிய அதிகாரிகள் கூறினர்.