திருப்போரூர் : திருப்போரூர் பேரூராட்சி மீன் அங்காடியில், மின் கட்டண பில் செலுத்தாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், மீன் வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்போரூர் பேரூராட்சி சார்ந்து, மீன் அங்காடி உள்ளது. இந்த மீன் அங்காடியை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு, மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்காக, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த அங்காடியில், சுற்றுவட்டார பகுதி மக்கள் மீன் வாங்குவதற்காக வந்து செல்கின்றனர். அங்கு, கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என, தெரிவித்தனர்.இதனால், இரவு நேரத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொபைல் போன் டார்ச் வெளிச்சத்திலும், மெழுகுவர்த்தி ஒளியிலும் வியாபாரம் நடத்தி வருகின்றனர்.இரவில், வியாபாரிகள், பொதுமக்களிடையே பணம் கொடுத்து, மீன் வாங்குவதில் கொடுக்கல், வாங்கல் சிக்கல் ஏற்பட்டு, வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது.மேலும், மெழுகுவர்த்தி வாங்குவதால் வியாபாரத்தில் கிடைக்கும் வருவாய், அதற்கே செலவாகிறது என, வியாபாரிகள் கூறுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.