செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பள்ளி மாணவ - மாணவியர் வளரிளம் பருவத்தில் எதிர்கொள்ளும்பிரச்னைகளுக்கு தீர்வு காண, எனக்குள் நான் எனும் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி, சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தின.இந்நிகழ்வை, கலெக்டர்அருண்ராஜ், நேற்று துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர்சுபா நந்தினி, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.அப்போது, கலெக்டர் அருண்ராஜ் பேசியபோது, ''சுற்றுச்சூழல், போதை பொருள் தடுப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து, மாணவர்களிடம்விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என, வலியுறுத்தினார். அப்போது, ''செங்கல்பட்டில் இருந்து பூதுார் வரை செல்லும் அரசு பேருந்தில், தினமும் எங்களை இளைஞர்கள் கிண்டல் செய்கின்றனர். இதனால், மனரீதியாக பாதிக்கப்படுகிறோம்,” என, அரசு பள்ளிமாணவியர் கலெக்டரிடம் தெரிவித்தனர்.செட்டிப்புண்ணியம்பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, அருகில்உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் குற்றம்சாட்டினர்.செட்டிப்புண்ணியம் பகுதியில் உள்ள கடை களை ஆய்வு செய்து, போதை பொருள் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
விழிப்புணர்வு குழு
எனக்குள் நான் என்ற தலைப்பில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, சமூக நலன், பள்ளிக்கல்வி, சுகாதாரம், காவல், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகிய துறையினர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த குழுவினர், தினமும் இரண்டு அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதில், பதின் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்கள். குழந்தை திருமணம், சைபர் குற்றங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.