செங்கல்பட்டு:செங்கல்பட்டில் சுதந்திர தின விழா, நேற்று கோலாகலமாக கொண்டப்பட்டது. இந்த விழாவில், 128 பயனாளிகளுக்கு, 2.96 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.நாட்டின் 78வது சுதந்திர தின விழா, நாடு முழுதும் நேற்று கொண்டப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், சுதந்திர தின விழாவையொட்டி, நேற்றுகாலை 9:05 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.கலை நிகழ்ச்சிஅதைத்தொடர்ந்து, எஸ்.பி., சாய் பிரணீத்துடன் திறந்த ஜீப்பில் சென்ற கலெக்டர், காவல் துறையினரின் அணிவகுப்பு மாரியதையை ஏற்றுக்கொண்டார். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், 78 பயனாளிகளுக்கு 1.12 கோடி ரூபாய் மதிப்பிட்டில், இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பத்து பயனாளிகளுக்கு 59,000 மதிப்பீட்டில் தையல் இயந்திரமும், கூட்டுறவுத்துறையின் சார்பில், கடன் உதவியாக ஒன்பது பயனாளிகளுக்கு, 56.10 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டன. வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் சார்பில், மூன்று பயனாளிகளுக்கு, 22.33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டன. அதேபோல், வேளாண்மை பொறியியல் துறை சார்பில், ஒரு பயனாளிகளுக்கு, 44.80 லட்சம் ரூபாய் மதிப்பில், கரும்பு அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டது. மகளிர் திட்டத்தில், ஒன்பது பயனாளிகளுக்கு 42.71 லட்சம் ரூபாய் கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில், 128 பயனாளிகளுக்கு 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்கினார்.பாராட்டு சான்றிதழ்மேலும், மாவட்டத்தில் வருவாய், காவல், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலகங்களில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி, 487 பேருக்கு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்கள், நீர்த்தாரை வழியாக, தேசிய கொடி சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவில், சப்- - கலெக்டர் நாராயணசர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.நீதிமன்றம்செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.இதில், அட்வகேட் அசோசியேஷன் சங்க தலைவர் சிவக்குமார், பார் அசோசியேஷன் சங்கத்தலைவர் ஆனந்தீஸ்வரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.மேல்மருவத்துார்மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், நிர்வாக அறங்காவலர் அன்பழகன் தலைமையில், சுதந்திர தின நிகழ்ச்சி நடந்தது. மூத்த சுதந்திர போராட்ட தியாகி வரதராஜரெட்டியார், தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.அதன்பின், எட்டு தையல் மிஷின், ஐந்து பேருக்கு மடிக்கணினி உள்ளிட்ட நுாறு பேருக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை, அறங்காவலர் அன்பழகன் வழங்கினார். இதில், கல்லுாரி முதல்வர் கண்ணன், கல்லுாரியின் நிர்வாக அதிகாரி லிங்கநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கொடியேற்றுவதில் தாமதம்
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், காலை 9:05 மணிக்கு, வழக்கமாக தேசியக்கொடி ஏற்றிவைத்து, கல்லுாரி முதல்வர் மரியாதை செய்வது வழக்கம்.ஆனால், நேற்று காலை 9:05 மணிக்கு தேசியக்கொடி ஏற்றப்படாததால், ஊழியர்கள், பொதுமக்கள் திரும்பி சென்றனர். அதன்பின், காலை 11:10 மணிக்கு வந்த முதல்வர் ஜோதிகுமார், மருத்துவமனை வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்காமல், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியப்படுத்தியாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.