| ADDED : ஜூன் 30, 2024 10:57 PM
சித்தாமூர்: சித்தாமூர் சுற்று வட்டார கிராம மக்களுக்கு, விவசாயமே பிரதான தொழில். இங்கு, நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்பூசணி ஆகியவை, பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகிறது.சித்தாமூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், ஆற்காடு செல்லும் சாலை ஓரத்தில், மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப் பயன்படுத்தப்படும் மின் மோட்டார் மற்றும் விவசாய மின் மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றில் செல்லும் மின் கம்பிகள், தலையில் முட்டும் அளவிற்கு தாழ்வாக தொங்கியபடி செல்வதால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் விபத்தில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.மேலும் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பம் சேதமடைந்து உள்ளதால், பலத்த காற்று வீசினால், சாலையில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், சேதமடைந்துள்ள மின்கம்பத்தை மாற்றி, தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.