| ADDED : ஜூலை 24, 2024 12:50 AM
பவுஞ்சூர்:பவுஞ்சூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே, வட்டார அரசு ஆசிரியர் பயிற்சி மையம் உள்ளது.லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி என, 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, வட்டார அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பும் வழங்கப்படுகிறது.மேலும், வட்டார அளவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் ஆகியவையும், இந்த பயிற்சி மையத்தில் நடத்தப்படுகின்றன.சாலையில் இருந்து பயிற்சி மையத்திற்கு செல்லும் பாதை, தாழ்வான பகுதியாக உள்ளதால், மழைக்காலத்தில் மழைநீர் தேங்கி, பாதை முழுதும் சேறு சூழ்ந்து காணப்படுகிறது. அதனால், நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் செல்லும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.தற்போது, பவுஞ்சூர் பஜார் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக நடந்து வருகிறது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டும் மண்ணை, பயிற்சி மைய வளாகத்தில் கொட்டி, மழைநீர் தேங்காதவாறு சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.