சென்னை, : சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., துாரத்தில் நடக்கிறது. இதில், ஓ.எம்.ஆரில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் நடக்கிறது. இதில், சோழிங்கநல்லுார் வரை ஒரு நிறுவனமும், நேரு நகரில் இருந்து சிறுசேரி வரை மற்றொரு நிறுவனமும் பணி செய்கிறது.மெட்ரோ ரயில் பாதையில், 90 அடி இடைவெளியில், ஒரு துாண் வீதம் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு துாணும் 45 அடி உயரம் உடையது.இப்பணிக்காக, ஆறுவழி சாலையான ஓ.எம்.ஆர்., நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. துாண்கள் அமைத்து, 'பியர் கேப்' பொருத்தப்படுகிறது.இந்த வகையில், மேட்டுக்குப்பம் முதல் காரப்பாக்கம் வரை, 2 கி.மீ., துாரத்தில், பியர் கேப் பொருத்தப்பட்ட 30 துாண்களில், 'யு கிரேடர்' இணைக்கும் பணி நடக்கிறது. அந்த இடங்கள், ஆறுவழி சாலையாக மாற்றப்பட்டு வருகின்றன.சிறுசேரியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை கடந்த ஆண்டு நடந்தது. இந்நிலையில், சோழிங்கநல்லுார் பணிமனை அமைக்க முடிவாகி உள்ளது.ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பில் இருந்து, 1.50 கி.மீ., துாரத்தில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலையில், ஆக்கிரமிப்பில் இருந்த 60 ஏக்கர் இடத்தை, தமிழக அரசு சமீபத்தில் மீட்டது.சோழிங்கநல்லுார் தொகுதியில் உள்ள, எட்டு அரசு அலுவலகங்கள், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. சொந்த கட்டடமாக ஒருங்கிணைந்த வளாகம் கட்ட, 60 ஏக்கர் இடத்தில், 10 ஏக்கர் ஒதுக்க வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் சட்டசபையில் பேசினார். விரைவில் இதற்கான இடம் ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மீதமுள்ள 50 ஏக்கர் இடத்தில், மெட்ரோ ரயிலுக்கான பணிமனை அமைக்க, மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக, அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர்.அப்படி பணிமனை அமைக்கும்போது, குமரன் நகர் சந்திப்பில் இருந்து, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில் ஒரு பாதை அமைத்து, பணிமனை வரை கொண்டு செல்ல வேண்டும். இதனால், குமரன் நகர் சந்திப்பு விரிவடையும். இந்த சாலை, 80 அடி அகலம் உடையது. இதில், இரண்டு பெரிய குடிநீர் குழாய் மற்றும் கழிவுநீர் குழாய் செல்கிறது. மேலும், செம்மஞ்சேரியில் இருந்து பகிங்ஹாம் கால்வாய் வரை, மூடு கால்வாய் அமைக்கும் திட்டமும் உள்ளது. இந்த கட்டமைப்புகளுக்கு மத்தியில், துாண்கள் கட்டி ரயில் பாதை அமைக்க வேண்டும். இதற்கு ஏற்ப, பணிமனைக்கான திட்டம் கையாளப்பட உள்ளது.இந்த இடத்தில், பணிமனை அமைக்கும் சாத்தியக்கூறு இல்லையென்றால், மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகம் மற்றும் இதர பயன்பாட்டுக்காக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.