| ADDED : ஜூலை 06, 2024 12:34 AM
கூவத்துார்:கூவத்துார் அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில், பாலாற்றின் கரை ஓரத்தில் உள்ள சிறிய குன்றின் மீது, பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கனகாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.இயற்கை எழில் நிறைந்த பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு, செய்யூர் சுற்றுவட்டார கிராம மக்கள், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பிரதோஷம், சிவராத்திரி, விழாக்காலங்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும் நாட்களில், அதிக அளவில்மக்கள் வந்து செல்கின்றனர்.அதனால், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, சில ஆண்டுகளுக்கு முன், கோவில் அருகே பொது சுகாதார வளாகம்அமைக்கப்பட்டது.ஆனால், அந்த பொது சுகாதார வளாகத்தை இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டுவராததால், கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் முதியோர், இயற்கை உபாதைகளை கழிக்கமுடியாமல் அவதிப் படுகின்றனர்.ஆகையால், துறை அதிகாரிகள் சுகாதார வளாகத்தை ஆய்வு செய்து, உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.