| ADDED : நவ 25, 2025 03:26 AM
பவுஞ்சூர்: செம்பூர் - அணைக்கட்டு இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பவுஞ்சூர் பஜார் பகுதியில் இருந்து பச்சம்பாக்கம் வழியாக அணைக்கட்டு செல்லும், மாநில நெடுஞ்சாலை உள்ளது. தொண்டமநல்லுார், கல்குளம், செம்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை குறுகலாக உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையை விரிவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை இந்த சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, 'டெண்டர்' விடப்பட்டது. இதையடுத்து, சாலை விரிவாக்க பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே உள்ள சாலையின் மொத்த அகலம் 12 அடி, தற்போது விரிவாக்கம் செய்து, மொத்தம் 18 அடி சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டு, சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. தற்போது முதற்கட்டமாக செம்பூர் கூட்ரோட்டில் இருந்து, அணைக்கட்டு வரை உள்ள 1.5 கி.மீ., துாரத்திற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக, வாளோடையில் இருந்து அணைக்கட்டு வரையில், 3 கி.மீ., துாரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளன.