உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்

 சாலை நடுவே மின்கம்பம் வாகன ஓட்டிகள் அச்சம்

ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கத்தில், சாலை நடுவே உள்ள மின்கம்பத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், மாற்றி அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 8வது வார்டு, செல்வராஜ் நகரிலுள்ள செந்தமிழ் சாலையில், 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக, 20 மீ., உயரமுள்ள மின்கம்பம் உள்ளது. இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தவிர, இரவு நேரத்தில் இந்த மின்கம்பத்தின் மீது மோதி, வாகன ஓட்டிகள் பலத்த காயமடைவதும் தொடர்கிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக இந்த மின்கம்பம், சாலை நடுவே தான் உள்ளது. இதை அகற்றி சாலையோரம் நட வேண்டும் என, மின்வாரியத்திடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. மாதத்தில் 10 இருசக்கர வாகன ஓட்டிகளாவது, இந்த மின்கம்பத்தின் மீது மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும், மின்கம்பத்திலுள்ள மின்சார கம்பிகள், அருகிலுள்ள மரக் கிளைகளின் மீது உரசி செல்கின்றன. இந்த மின் கம்பத்தின் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், கம்பத்தின் உறுதி தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன், சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த கம்பத்தை புதிதாக மாற்றி, சாலையோரம் நட, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை