உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மாமல்லை நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

 மாமல்லை நடுநிலை பள்ளியை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, நகருக்கு வெளியே, 2 கி.மீ., தொலைவில் உள்ள பூஞ்சேரியில் இயங்கி வருகிறது. மாமல்லபுரம் நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மாணவ -மாணவியர் இங்கு படித்து வருகின்றனர். மாமல்லபுரம் நகர் பகுதியில், தற்போது, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மட்டுமே இயங்கி வருகிறது. மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளி மற்றும் அருகிலுள்ள எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியர், மேல்நிலை வகுப்பு படிக்க, பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்கின்றனர். இந்த மேல்நிலைப் பள்ளிக்கு அரசுப் பேருந்து, ஷேர் ஆட்டோ ஆகியவற்றில் சென்று திரும்பும் நிலையில், அரசு பேருந்தில் ஏற்றாமல் புறக்கணிப்பது உள்ளிட்ட காரணங்களால், மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாமல்லபுரத்தில் இயங்கும் நடுநிலைப் பள்ளியை, பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: மாமல்லபுரம் மற்றும் கொக்கிலமேடு மாணவியர் பள்ளிக்குச் செல்ல சிரமப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதி, மாமல்லபுரத்தில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். சென்னை அணுமின் நிலையம் நிர்வாகம், மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளியில், ஆறு வகுப்பறை கட்டடங்களை புதிதாக கட்டியுள்ளது. கூடுதலாக வகுப்பறை கட்டடங்கள் கட்டவும் தயாராக உள்ளது. இதனால், மாணவியர் வசதிக்காக, மாமல்லபுரம் நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை