உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையை குடையும் பெருச்சாளி தாம்பரம் மேம்பாலத்தில் பாதிப்பு

 சாலையை குடையும் பெருச்சாளி தாம்பரம் மேம்பாலத்தில் பாதிப்பு

தாம்பரம்: தாம்பரத்தில் சாலையை கொஞ்சம் கொஞ்சமாக குடையும் பெருச்சாளியால், மேம்பாலத்தில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதோடு, மேம்பாலத்தின் தரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துகின்றன. முக்கியமான இம்மேம்பாலத்தை முறையாக பராமரிப்பதில்லை. மேற்பகுதியில், பல இடங்களில் சீர்குலைந்து சிறிய சிறிய பள்ளமாக மாறி, வாகன ஓட்டிகள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மேம்பாலத்தில் இருந்து, தாம்பரம் பேருந்து நிலையம் மார்க்கமாக இறங்கும் பாதையில், 'ரேம்ப்' முடிந்து தார்ச்சாலை துவங்கும் இடத்தில், அடிக்கடி பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாகி விட்டது. நல்ல நிலையில் இருக்கும் குறிப்பிட்ட அந்த இடத்தில், திடீர் திடீர் என பள்ளம் ஏற்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இந்த திடீர் பள்ளங்களுக்கு காரணம் தெரியாமல் தவித்த நிலையில், தற்போது பெருச்சாளிகள் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் கடைகள் அதிகம் உள்ளதால், பெருச்சாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அவை கொஞ்சம் கொஞ்சமாக சாலையை குடைந்து, பள்ளத்தை உண்டாக்குவதும், ஒவ்வொரு முறையும் ஜல்லி கலவை கொட்டி பள்ளத்தை மூடினாலும், மீண்டும் பெருச்சாளிகள் பள்ளத்தை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், பெருச்சாளி தொல்லை அதிகமாக இருந்தும், அதை கட்டுப்படுத்தி மேம்பாலத்தை பாதுகாக்க, நெடுஞ்சாலைத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை சாதாரணமாக விட்டுவிட்டால், மேம்பாலத்தில் சிமென்ட் ரேம்ப் முடிந்து, அடுத்துள்ள தார்ச்சாலை முழுதும் சீர்குலைந்து, திடீரென பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, பெரும் விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், இனியாவது பெருச்சாளி தொல்லையை கட்டுப்படுத்தி, மேம்பாலத்தை பாதுகாக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை