சென்னை: சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 225 ரூபாய்க்கு எட்டு பொருட்கள்; 499 ரூபாய்க்கு, 18 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகை தொகுப்புகளின் விற்பனை துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகை, வரும் ஜன., 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு ரேஷன் கடைகளில், 225 ரூபாய்க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்கப்படுகிறது. காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடைகளில், 499 ரூபாய்க்கான மளிகை தொகுப்பு விற்கப்படுகிறது. இதில், தலா 500 கிராம் பச்சரிசி, வெல்லம், 200 கிராம் பாசி பருப்பு, தலா, 50 கிராம் முந்திரி, திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 100 கிராம் ஜவ்வரசி, 170 கிராம் சேமியா, 100 மி.லி., நெய், தலா, 50 கிராம் மஞ்சள் துாள், மிளகாய் துாள், மிளகு, சீரகம், 200 கிராம் கடலை பருப்பு, 250 கிராம் உளுந்தம் பருப்பு, 1 கிலோ உப்பு, 100 கிராம் உடைத்த கடலை, கைப்பை ஆகிய, 18 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, 999 ரூபாய்க்கு சிறுதானியங்கள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விற்கப்பட்டு வருகின்றன.