மதுராந்தகம்: நம் நாளிதழ் செய்தி எதிரொலியால், மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், பயணியர் வசதிக்காக கூடுதலாக நிழற்குடை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 5,000க்கும் மேற்பட்ட பயணியர், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் பயணியர் வசதிக்காக, தகர 'ஷீட்'டுகளால் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, மழைக்காலம் துவங்கிஉள்ள நிலையில், இந்த நிழற்குடை போதுமானதாக இல்லை. அத்துடன், நிழற்குடையில் இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டன. இதனால், பயணியர் அருகிலுள்ள கடைகளில் தஞ்சமடைந்தனர். எனவே, பேருந்து நிலையத்தில் கூடுதல் நிழற்குடை அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் மூலமாக பேருந்து நிலையத்தில் புதிதாக நிழற்குடை, இருக்கைகள் மற்றும் கான்கிரீட் தரை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.