திருப்போரூர்: திருப்போரூர்- - நெம்மேலி சாலையில், ஒரு பக்கத்தை அகலப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன. திருப்போரூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, தண்டலம், ஆலத்துார், சிறுதாவூர், ஆமூர், செம்பாக்கம் என, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இ.சி.ஆர்., சாலையிலுள்ள கோவளம், திருவிடந்தை இடங்களுக்கு, திருப்போரூர் வழியாக செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் எளிதில் இ.சி.ஆர்., சாலையை அடைய, திருப்போரூர் - நெம்மேலி சாலையை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள பகிங்ஹாம் கால்வாய்க்கு இடையே, 3 கி.மீ., செல்லும் இச்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டதால், இ.சி.ஆர்., மற்றும் ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் பிரதான சாலையாக, திருப்போரூர் - நெம்மேலி சாலை உள்ளது. பிரதான சாலையின் அகலம் குறுகிய நிலையில், ஒருவழி சாலையாக இருப்பதால், எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழி இல்லை. இதனால், அடிக்கடி விபத்துகள் மற்றும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, முகூர்த்த நாள் மற்றும் கோவில் விழா நாட்களில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வருகின்றனர். அப்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவர். எனவே முதற்கட்டமாக, திருப்போரூர் - நெம்மேலி சாலையில், கோவில் அருகே இருந்து ஆறுவழிச்சாலை சந்திப்பு பகுதி வரை சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக,'பொக்லைன்' இயந்திரம் மூலமாக, சாலையோரம் மண் கொட்டி அகலப்படுத்தும் பணிகள் துவங்கி உள்ளன.