சென்னை, சென்னை மாவட்டத்தில், ஓட்டு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட உள்ளவர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான ராதாகிருஷ்ணன் தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.பின், கமிஷனர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னை மாவட்டத்தில் மூன்று லோக்சபா தொகுதிகளில், ஓட்டு எண்ணும் பணிகளில், 1,433 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இதில், அலுவலக உதவியாளர்கள் தவிர்த்து, 1,111 நபர்கள், கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஓட்டு எண்ணும் மையங்களில், 1,384 பணியாளர்கள், மூன்று அடுக்கு பாதுகாப்பு முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.ஓட்டு எண்ணும் மையங்களில் ஏற்கனவே ராணிமேரி கல்லுாரியில் 176, அண்ணா பல்கலையில், 210, லயோலா கல்லுாரியில் 198 என, மொத்தம் 584 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.ஓட்டு எண்ணிக்கை நாளன்று டேபிள் வாரியாக, ராணிமேரி கல்லுாரியில் 106, அண்ணா பல்கலையில், 132, லயோலா கல்லுாரியில் 107 என, 345 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.