சென்னை, சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் புதிய காலஅட்டவணையில், கூடுதல் ரயில்கள் அறிவிக்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை ரயில் கோட்டம் சார்பில், சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். கூடுதல் ரயில்கள் இயக்கம், கூடுதல் பெட்டிகள், மின்சார ரயில் சேவை நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பயணியர் சங்கங்கள், எம்.பி., - எம். எல்.ஏ.,க்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அடுத்த இரண்டு மாதங்களில் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணை வெளியாக உள்ளது. இதில், கூடுதல் ரயில்கள் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்கத்தின் செயலர் முருகையன் கூறியதாவது: சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. போதிய மின்சார ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில் பயணியர் நெரிசலில் பயணம் செய்து வருகின்றனர். பராமரிப்பு பணியை காரணம் காட்டி, 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த ரயில்களின் சேவையை மீண்டும் துவங்க வேண்டும். அதுபோல், தற்போதுள்ள ஒன்பது பெட்டி பயணியர் ரயில்களை, 12 பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும். தாம்பரம் - ஆவடி, திருவள்ளூருக்கு நேரடி மின்சார ரயில் சேவை துவங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வரும் புதிய காலஅட்டவணையில், கூடுதல் ரயில்கள் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, சென்னை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம், ரயில் சேவை நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதி மேம்படுத்துவது குறித்து பயணியர் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் குறித்து, நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் வரும் புதிய கால அட்டவணையில், கூடுதல் மின்சார ரயில்கள் அறிவிப்பு இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.