சென்னை, 'டிவிஷன் கிரிக்கெட் லீக்' போட்டியில், பெருங்களத்துார் சி.சி., அணி, 89 ரன்கள் வித்தியாசத்தில், ஸ்பிக் ஆர்.சி., அணியை தோற்கடித்தது.டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டிகள், சென்னையில் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.அதன்படி, மூன்றாவது டிவிஷன் 'பி' பிரிவு போட்டியில், பெருங்களத்துார் சி.சி., மற்றும் ஸ்பிக் ஆர்.சி., அணிகள் மோதின. முதலில் 'பேட்டிங்' செய்த பெருங்களத்துார் சி.சி., அணி, 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 319 ரன்களை அடித்தது. அணியின் வீரர் நவீன் 156 பந்துகளில், 16 சிக்சர், 7 பவுண்டரியுடன், 187 ரன்கள் அடித்தார். மற்றொரு வீரர் விஜய், 108 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒன்பது பவுண்டரி என, 106 ரன்களை அடித்தார். அடுத்து பேட் செய்த, ஸ்பிக் ஆர்.சி., அணி, 43.5 ஓவர்களில் 'ஆல் - அவுட்' ஆகி, 230 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 89 ரன்களில் பெருங்களத்துார் சி.சி., அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் முதலில் ஆடிய, தெற்கு ரயில்வே அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து, 275 ரன்களை அடித்தது. அணியின் வீரர் செல்வா, 92 பந்துகளில் ஐந்து சிக்சர் மற்றும் ஐந்து பவுண்டரியுடன் 109 ரன்களை அடித்தார். அடுத்து பேட்டிங் செய்த, நேஷ்னல் ஆர்.சி., அணி, 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி, எட்டு விக்கெட் இழந்து, 267 ரன்களை அடித்து தோல்வியடைந்தது.மற்றொரு ஆட்டத்தில், திருவல்லிக்கேணி சி.எஸ்., அணி, 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து, 321 ரன்களை அடித்தது. அணியின் வீரர் சுபாஷ் 127 பந்துகளில் 16 பவுண்டரியுடன் 141 ரன்கள் அடித்தார். அடுத்து களமிறங்கிய சென்னை துறைமுக எஸ்.சி., அணி, 44.4 ஓவர்களில் 'ஆல் அவுட்' ஆகி, 179 ரன்கள் மட்டுமே அடித்தது.