| ADDED : மார் 29, 2024 12:30 AM
சென்னை, தமிழக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், வாழ்நாள் சான்றை ஏப்., மாதம் முதல் வழங்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் எந்த மாதம் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் இருந்து வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் இரண்டும் பெறுவோர், ஓய்வு பெற்ற மாதத்தை கணக்கில் கொண்டு வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்.குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், கருணைத் தொகை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வொரு ஆண்டும் குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதத்தில் இருந்து வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும். சான்று அளிக்காத பட்சத்தில், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்படும்.எனவே, ஏப்., மாதம் முதல் அலுவலக வேலை நாட்களில், காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதிய பிரிவில் உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க, ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டையுடன் நேரில் வர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.