திருவொற்றியூர், கடலில் தத்தளித்த எருமை மாட்டை, மீனவர்கள் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டனர். திருவொற்றியூர், பட்டினத்தார் கோவில் அருகே, நேற்று முன்தினம் மாலை எருமை மாடு ஒன்று மிரண்டு ஓடியது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், எருமை மாட்டை விரட்டினர். இதனால் தறிகெட்டு ஓடிய எருமை மாடு, திருவொற்றியூர் சூரை மீன் பிடித்துறைமுகம் கடலுக்குள் சென்றது. கடலில் இறங்கிய எருமை மாடு, 3 நாட்டிகல் மைல் நீந்தி சென்ற நிலையில், ஆழமான பகுதியில் மாட்டிக் கொண்டது. துறைமுகம் பகுதி என்பதால், கடல் அலையின் வேகம் குறைவாக இருந்தது. இதனால், கடலுக்குள் இழுத்து செல்லப்படாமல் எருமை தத்தளித்து கொண்டிருந்தது.அவ்வழியே வந்த மீனவர்கள், எருமை மாடு தத்தளிப்பதை பார்த்து, உடனடியாக சக மீனவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.இதையடுத்து, திருவொற்றியூர் மண்டல நல அலுவலர் லீனா தலைமையிலான சுகாதார துறை அதிகாரிகள், போலீசார், மீனவர்கள், தீயணைப்பு துறையினருடன், எருமை மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இரு பைபர் படகுகள், 10 அடி கயிறு, லைட் உள்ளிட்ட உபகரணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பின், இரு படகுகளுடன் மாடு தத்தளித்த இடத்திற்கு சென்றனர்.கடலுக்குள் எருமை சிக்கியருந்த இடத்திற்கு, நான்கு மீனவர்கள் படகில் இருந்து நீந்தி சென்றனர். கடலில் தத்தளித்த எருமையை கயிற்றால் கட்டினர்.எருமையை கடலில் இழுத்து செல்லும் வகையில், மாட்டின் இரு கொம்புகளை சுற்றியும், கழுத்து மற்றும் தொடை இணைப்பு பகுதியிலும் கயிறுகளை இறுக்கமாக கட்டினர். கயிறுகளின் மறு முனை பக்கவாட்டில் இருந்த இரு படகில் இருந்தோரிடம் இருந்தது. இதைத் தொடர்ந்து எருமையை இழுத்துக் கொண்டு இரு படகுகளும் புறப்பட்டன. மாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இழுத்துச் செல்வதற்காக, இரு படகுகளும் சீரான வேகத்தில் இயக்கப்பட்டன.ஒரு வழியாக இரண்டு மணி நேரத்திற்கு பின், கடற்கரை பகுதிக்கு மாட்டை மீட்டு வந்தனர். மீட்கப்பட்ட எருமை மாடு, புதுப்பேட்டை மாட்டு தொழுவத்திற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. மாட்டின் உரிமையாளர் யார் என்பது தெரியவில்லை.இது குறித்து, மாநகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.