அசோக் நகர்:அசோக் நகர், ஐந்தாவது அவென்யூவில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வாக, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னை, கோடம்பாக்கம் மண்டலம் அசோக் நகர் ஐந்தாவது அவென்யூவில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஐந்தாவது அவென்யூவில் குளம் போல் மழைநீர் தேங்குவது வாடிக்கை.கோடம்பாக்கம் மண்டலத்தில், 181கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்ட நிலையிலும், அசோக் நகர் ஐந்தாவது அவென்யூ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.இதையடுத்து, கடந்த ஆண்டு 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த மழையிலும், இப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி, பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.இங்கிருந்து மழைநீர் வெளியேற வழி இல்லாத காரணத்தால், மற்ற பகுதிகளில் மழைநீர் வடிந்தாலும், அசோக் நகரில் மின் மோட்டார் வாயிலாக தண்ணீரை வெளியேற்ற வேண்டிய நிலை இருந்தது.இதையடுத்து, பாலகிருஷ்ணா தெருவில், 394 அடி துாரத்திற்கு, 40 லட்சம் ரூபாய் மதிப்பில், ஐந்தாவது அவென்யூவில் இருந்து, ஏழாவது அவென்யூ வழியாக, ஜாபர்கான்பேட்டை கால்வாய்க்கு மழைநீர் வெளியேற்ற, வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததும், ஐந்தாவது அவென்யூவிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.