| ADDED : பிப் 15, 2024 12:45 AM
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கத்தில், கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.சென்னையில், சாலை மற்றும் தெருக்களில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், கேட்பாரற்று கிடக்கின்றன. அவற்றை சமூக விரோத செயல்களுக்காக சிலர் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறாக, நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அகற்ற, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த வகையில், சாலையோரங்களில் நீண்ட நாட்கள் இருந்த வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, அந்த உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.அண்ணா நகர் மண்டலம், கீழ்ப்பாக்கம் கல்லறை சாலையோரத்தில், ஏராளமான வாகனங்கள் பல நாட்களாக, கேட்பாரற்று நிற்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.'இதுபோன்ற வாகனங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும்' என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.