சென்னை :சொகுசு பேருந்துகளில் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம் துவங்கி உள்ளது. இதனால், பெண் பயணியருக்கான இலவச பயண திட்டம், சொகுசு பேருந்துகளிலும் கொண்டுவர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.தமிழகத்தில் 2021 மே 7ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் வெற்றி பெற்று, முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார். பதவியேற்றவுடன் அவர், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.இதில், 'நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்' என்ற திட்டமும் இடம்பெற்று இருந்தது. இந்த திட்டம், மே 8ம் தேதி முதலே நடைமுறைக்கு வந்தது.அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் 9,000 நகர பேருந்துகளில் 7,300க்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகளில், இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.சென்னையில் 1,559 சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். நகர்ப்புறங்களில், வெள்ளை போர்டு உடைய பேருந்துகளிலும், கிராமப்புறங்களில் நகர பேருந்துகளிலும், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இத்திட்டத்தை எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்த, அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.மாநிலம் முழுதும், தினமும் சராசரியாக, 49 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அரசு பேருந்துகளில் பெண் பயணியரின் எண்ணிக்கையும், 62 சதவீதமாக உயர்ந்துள்ளது.இந்த திட்டத்தை மேம்படுத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணியரை கணக்கெடுக்கும் பணியை, மாநகர போக்குவரத்துக் கழகம், நடத்துனர்கள் வாயிலாக துவங்கி உள்ளது.பிராட்வே - தாம்பரம், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், திருவான்மியூர், கேளம்பாக்கம், திருவொற்றியூர், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில், மாநகர சொகுசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.குறிப்பாக, எந்தெந்த நிறுத்தங்களில் எத்தனை பெண்கள் பயணம் செய்கின்றனர் என்பது குறித்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், சொகுசு பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயண திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:சாதாரண கட்டண பேருந்துகளில், பெண்களுக்கான இலவச பயண திட்டம், பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்த, நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் 3,200 பேருந்துகளில், 50 சதவீத பேருந்துகள் தற்போது, சாதாரண கட்டண பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன.இருப்பினும், சில வழித்தடங்களில் செல்லும் சொகுசு பேருந்துகளில், பெண் பயணியர் எண்ணிக்கை எவ்வளவு இருக்கிறது. ஏன் அவர்கள் சொகுசு பேருந்துகளில் செல்ல விரும்புகின்றனர். கூட்ட நெரிசல் காரணமா உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அடுத்த சில வாரங்களுக்கு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பிறகே இந்த திட்டத்தை சொகுசு பேருந்துகளிலும் விரிவுபடுத்தலாமா? அல்லது சாதாரண கட்டண பேருந்துகளை கூடுதலாக இயக்கலாமா? என்பதை இறுதி செய்து, பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.12 ஆண்டுகளாக இயக்கம்கோயம்பேடு - ஆவடி வழித்தடத்தில், 12 ஆண்டுகளாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விபத்து ஏற்பட்ட பேருந்து, காலாவதியாகவில்லை; மேலும் மூன்று ஆண்டுகள் இயக்குவதற்கு அனுமதி உள்ளது. சம்பவத்தன்று, ஓட்டுனர் தானியங்கி கதவை இயக்கும்போது, அதிக அழுத்தம் ஏற்பட்டு உடைந்துள்ளது. இதுதொடர்பாக பயணியரிடமிருந்து எந்த புகாரும் வரவில்லை. அதேபோல், துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும் அளவிற்கும் புகார் வரவில்லை. உடைந்த கதவு, ஆவடி பணிமனையில் சீரமைக்கப்பட்டது.யுவராஜ்,பணிமனை கிளை மேலாளர், ஆவடி.இதையும் சற்று கவனிங்க!வழித்தடத்தில் ஓட்டுவதற்கு, லாயக்கற்ற பேருந்துகளை அரசு பயன்படுத்தி வருகிறது. கட்டாயத்தின்படி இயக்கி வருகிறோம். பெரும்பாலான பேருந்துகளில், 50 சதவீத 'பிரேக்' கிடையாது. பல ஆண்டுகளாக ஓட்டை உடைசல் பேருந்தை தான் இயக்குகிறோம். பேருந்தில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகள் கூட சீரமைக்கப்படுவதில்லை. சொந்த பணத்தை செலவு செய்து சீரமைக்கிறோம். குறிப்பாக, பெண்கள் இலவச பயண திட்டத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள்தான், படுமோசமான நிலையில் உள்ளன.-பெயர் கூற விரும்பாதமாநகர பேருந்து ஓட்டுனர்.உயிர்பலி நிச்சயம்சென்னையில் மட்டுமின்றி, அனைத்து இடங்களிலும் ஓட்டை உடைசல் பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் இதுபோன்ற பேருந்துகளுக்கு விடிவு கிடைப்பதில்லை. காலாவதியான பேருந்துகளை, கட்டாயப்படுத்தி ஓட்டுனர்களை இயக்க வைக்கின்றனர். மழைக்காலத்தில் பேருந்தில் தண்ணீர் ஒழுகுவதும், வெயில் காலத்தில் துருப்பிடித்து உடைந்து விழுவதும் வாடிக்கையாகி விட்டது. மக்களின் உயிர்மீது அரசுக்கு அக்கறை கிடையாது. இலவச பேருந்து என்ற பெயரில் காலாவதியான பேருந்துகள் தான் இயக்கப்படுகின்றன. பேருந்தில், முதியோருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு என எந்த வசதியும் கிடையாது.ந.கோதை ஜெயராமன், 62, சமூக ஆர்வலர், திருமங்கலம்.
பஸ்சின் கதவு விழுந்து பெண் பயணி காயம்
காலாவதியான பஸ்களால் மக்கள் அச்சம்கோயம்பேடு - ஆவடி செல்லும், 'தடம் எண்: 70ஏ' மாநகர பேருந்து, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கடைசி சர்வீசாக கோயம்பேடில் இருந்து ஆவடியை நோக்கி சென்றது.அண்ணா நகர் மேற்கு பேருந்து பணிமனை நிறுத்தத்தில் பயணியரை இறக்குவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, முன்பக்க தானியங்கி கதவு எதிர்பாராத விதமாக கழன்று விழுந்தது. இதனால், பேருந்து அருகில் நின்றிருந்த பெண் பயணிக்கு, முதுகில் லேசான காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர், அவரை மீட்டு, நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம், வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, அதில் பயணித்தவர்கள் வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின் சம்பந்தப்பட்ட பேருந்தை பணிமனைக்கு ஓட்டிச் சென்றனர்.திருமங்கலம் போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்ததில், அவர் புகார் எதுவும் கொடுக்காமல் வீடு திரும்பினார்.முதற்கட்ட விசாரணையில், காயமடைந்த அப்பெண், அம்பத்துார், புதுாரைச் சேர்ந்த சுகன்யா, 45, என்பது தெரிந்தது. போலீசார், புகார்தாரரின் பெயரின்றி வழக்கு பதிந்துள்ளனர்.கதவு கழன்று விழுந்த '70ஏ' பேருந்து, 2022ல் காலாவதியாகி, 2 ஆண்டுகள் கூடுதலாக இயக்க அனுமதி வழங்கப்பட்டது. வரும் செப்டம்பர் வரை பேருந்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.அப்பேருந்து ஓட்டுனர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தாயுமானவர், 40, கூறியதாவது:கோயம்பேடில் இருந்து ஆவடி வரை குறைந்தது 50க்கும் மேற்பட்ட நிறுத்தங்கள் உள்ளன. ஒவ்வொரு முறையும் 'ஹைட்ராலிக்' கதவு இயக்கும்போது, அதன் பிரஷருக்கு ஏற்ப அழுத்தம் கிடைக்கும்.காலையில் 4:30 மணிக்கு சர்வீஸ் துவங்கி, இரவு வரை பேருந்தை இயக்குகிறேன். 18 மணி நேரம் பேருந்தை இயக்கி, கடைசி பயணத்தில் கதவு உடையும்போது, அது ஹைட்ராலிக் பழுது காரணமாக ஏற்பட்டிருக்கலாம். ஹைட்ராலிக்கில் அதிக அழுத்தம் கிடைத்ததால், கதவு உடைந்து விழுந்திருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.